×

அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்தியாவுக்கு அளித்த வர்த்தக சலுகை ரத்து: 5ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

வாஷிங்டன்: வரியற்ற வர்த்தக முன்னுரிமை திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இறக்குமதி சலுகை திட்டம் வரும் 5ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 120 வளரும் நாடுகள் தங்கள் தயாரிப்புகளை, எவ்வித வரியும் செலுத்தாமல் அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான சலுகையை, வரியற்ற வர்த்தக முன்னுரிமைச் சலுகை (ஜிஎஸ்பி) திட்டத்தின் கீழ் அமெரிக்கா அளித்து வருகிறது. இதன் மூலம், இந்திய நிறுவனங்கள் அமெரிக்க சந்தைகளில் வர்த்தகம் செய்வதற்கு தடையற்ற வாய்ப்புகள் உருவாகின. ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு போதுமான சந்தை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கவில்லை.

இதனால், ஜிஎஸ்பி திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அளித்துவரும் சலுகையை ரத்து செய்ய உள்ளதாக டிரம்ப் கடந்த மார்ச் 4ம் தேதி அறிவித்தார். இதற்கான ஆணையை வெளியிடுவதற்குரிய 60 நாள் அவகாசம் கடந்த மே 3ம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று இதற்கான ஆணையை வெளியிட்டார். அதில், அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் போதிய, நியாயமான வாய்ப்புகள் வழங்குவதை இந்தியா உறுதி செய்யாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதனால், இந்தியாவுக்கு அளித்து வந்த, சிறப்புரிமை சலுகையை வரும் ஜூன் 5ம் தேதி முதல் ரத்து செய்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்’ என கூறப்பட்டுள்ளது. ‘இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையால், அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 300 மில்லியன் அமெரிக்க டாலர் கூடுதல் வரிச்சுமை ஏற்படும்’ என்று செனட் எம்பி.க்கள் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி, இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

தேர்தலில் மீண்டும் போட்டியா? 18ம் தேதி அறிவிக்கிறார் டிரம்ப்:
இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து புளோரிடா மாகாணம், ஆர்லேண்டோவில் உள்ள ஆம்வே மையத்தில் ஜூன் 18ம் தேதி நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பேரணியில் அறிவிக்க இருக்கிறேன். அனைவரும் வாரீர்...’ என்று டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், இந்நிகழ்ச்சியில் அவரது மனைவி மெலனியா டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், அவரது மனைவி கரென் பென்ஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Trump ,announcement ,India , Chancellor Trump, Announcement, India, Business Offer, Canceled, 5th, First
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...