திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் 14ம் தேதி துவக்கம்: 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவை ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 14ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் தொடங்குகிறது. இதையொட்டி, 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார் உற்சவர் சிலைக்கு தினமும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், சிலைகள் சேதமடையாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்ட மாதத்தில் சுவாமிக்கு அணிவிக்கக் கூடிய தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல், இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் வருகிற 14ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தின் முதல்நாளான 14ம் தேதி உற்சவர் மலையப்பசுவாமி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு யாகம், அபிஷேகம் ஆகியவை நடந்து முடிந்ததும், வைர கவசம் அணிவிக்கப்படுகிறது. வைர கவசத்துடன் உற்சவர் மலையப்பசுவாமி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
2வது நாளான 15ம் தேதி முத்துக்கவசமும், 3வது நாளான 16ம் தேதி மலையப்பசுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளில் மலையப்பசுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் ஆண்டு முழுவதும் அப்படியே வைக்கப்படும். அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகத்தின்போது மீண்டும் உற்சவர் மீது அணிவிக்கப்பட்ட கவசம் அகற்றப்படும். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி 14ம் தேதி நிஜபாத தரிசனம், 15ம் தேதி வசந்த உற்சவம், 16ம் தேதி  கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட 3 நாட்கள் அதிகாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிவரை நடக்கும் தோமாலை சேவை, அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை நடக்கும் அர்ச்சனை சேவை ஆகியவை பக்தர்களின்றி ஏகாந்தமாக நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Jatashabhishek ,Tirupathi Ezhumalayyan , Tirupathi Ezhimalathiyan, Jashathabhishekam, 14th, Arjita, cancellation service
× RELATED திருநள்ளாறு கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்