×

சந்தான சீனிவாச பெருமாள் கோயில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு செயல் அலுவலர்களை காப்பாற்றும் உயர்அதிகாரிகள்

சென்னை: பணியாளர் நியமனத்தில் முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய கோயில் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் காப்பாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக, லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாக புகார் எழுந்துள்ளது.சென்னை முகப்பேர் வெள்ளாள தெருவில் சந்தான சீனிவாச பெருமாள் கோயில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உளளது. இக்கோயிலில் கமிஷனர் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகம் சார்பில் தன்னிச்சையாக பணியாளர்களை நியமனம் செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பணியாளர்களிடம் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு நியமனம் நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனருக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் நடந்த முதற்கட்ட விசாரணையில், 1.50 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு 40 பணியாளர்கள் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 செயல் அலுவலர்கள் மீது 17 பி பிரிவின்கீழ் நடவடிக்கை எடுத்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தில் உதவி ஆணையர் அன்னக்கொடி தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, முறைகேடாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் மீதும் 17 பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார். அதன் பேரில் பணியாளர்கள், செயல் அலுவலர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி கமிஷனரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், செயல் அலுவலர்கள், தலைமை எழுத்தர், மேலாளர் உட்பட அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக உதவி ஆணையர் அன்னக்கொடி மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பலர் மீதும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு, புகாரில் சிக்கியவர்களிடம் இருந்து உயர் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், புகாரில் சிக்கிய பலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையை அறநிலையத்துறை கைவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : offenders officers ,Santhana Srinivasa Perumal Temple , Officers in Santhana Srinivasa Perumal Temple, Staff Appointment
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...