கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற தமிழக பாஜவினருக்கு மத்திய அமைச்சர் பதவி மறுப்பு

சென்னை: கட்சியை வளர்க்கவும், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற தமிழக பாஜவினருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்காமல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு பதவி வழங்கியதற்கு கட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ படுதோல்வி அடைந்தது. இதனால், தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாஜவை வளர்க்க பாடுபட்டவர்களுக்கு மாநிலங்களவை பதவி வழங்கி மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கவில்லை. அதற்கு மாறாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் பாஜவில் சேர்ந்தது 2006ல் தான். நிர்மலா சீதாராமன் மதுரையில் பிறந்தவர். ஆந்திராவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவர் கணவருடன் ஆந்திராவில் குடியேறினார். நிர்மலா சீதாராமன் முதலில் மாநிலங்களவை எம்பியானது ஆந்திராவில் இருந்து, அடுத்து கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியுள்ளார்.

அப்படியிருக்கும் போது அவரை எப்படி தமிழகத்தை சார்ந்தவர் என்று கூற முடியும். அதேபோல ஜெய்சங்கர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். அவர் பிறந்து, வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தான். அதன் பிறகு அவர் ஜப்பான் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் முழுக்க முழுக்க டெல்லியில் தான் இருந்து வருகிறார். அவருக்கு தமிழ் தெரியுமா என்று கூட தெரியவில்லை. அப்படியிருக்கும் போது அவரையும் எப்படி தமிழகத்தை சார்ந்தவர் என்று கூறலாம் என்று பாஜவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழக பாஜ தலைவராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் 1999ல் பாஜகவில் இணைந்தார். படிப்படியாக உயர்ந்து மாநில தலைவர் பதவியை வகித்து வருகிறார். அவர் கட்சியை வளர்க்க பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறையும் சென்றுள்ளார். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டமாக, ஒவ்வொரு தெரு, தெருவாக சென்று கட்சியை வளர்க்க பாடுபட்டவர்.

அவரை போல இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் உள்ளனர். அவர்களில் யாருக்காவது மத்திய அமைச்சர் பதவி வழங்கியிருந்தால் அவர்கள் தமிழகத்தில் பாஜவை வளர்க்க நடவடிக்கை எடுத்திருப்பார்கள். அது கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கும். அப்படியிருக்கும் பட்சத்தில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றோருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்படி கட்சியை வளர்ப்பார்கள். கட்சியை வளர்க்க ஒருவர் வேண்டும், மத்திய அமைச்சர் பதவி இன்னொருவருக்கு வழங்குவதா என்றும் பாஜவினர் மனம் குமுறி வருகின்றனர்.

× RELATED ம.பி.யில் கொலை முயற்சி, வன்முறை வழக்கு மத்திய அமைச்சரின் மகன் கைது