×

வேலையின்மை, ஏற்றுமதி, வளர்ச்சி சரிவு... நிர்மலா சீதாராமன் சந்திக்கும் 7 சவால்கள் : சமாளிப்பாரா புதிய நிதி அமைச்சர்?

புதுடெல்லி: புதிய நிதி அமைச்சராக யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முக்கியமாக 7 சவால்கள் காத்திருக்கின்றன. கடந்த முறை மோடி ஆட்சியில் நிதி அமைச்சராக அருண் ஜெட்லி இருந்தார். அவர் பதவியேற்ற நிலையில் பல மாற்றங்களை, நிதி சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். உண்மையில் பெரும்பாலும் நடுத்தர மக்களை, வியாபாரிகளை, தொழிலதிபர்களை பாதித்ததே தவிர, சிறிய  அளவில் தான் பலன் அளித்தது. குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒன்றே பெரிய அளவில் மக்களை பாதித்தது. மேலும், ஜிஎஸ்டி நடைமுறையும் மக்களை, குறிப்பாக வியாபாரிகளை பாதித்தது. பல சிறு, குருந்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இது ஒரு பக்கம் என்றால், வேலையின்மை நாடு முழுக்க தலைவிரித்தாடியது. படித்தவர்கள் உட்பட  எல்லா தரப்பு மக்களுக்கும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகி வருகிறது. இந்த விவகாரம் தான் தேர்தலில் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இந்த நிலையில், நிர்மலா சீதாராமன், முதல் கட்டமாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டுள்ளது.

சவால்கள் என்னென்ன?

1. பல வகையிலும் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு  முதல் பல முனைகளிலும், துறைகளிலும் உற்பத்தி, வளர்ச்சி பெரிதும் சரிவை கண்டுள்ளது. இதை உடனே கவனிக்க வேண்டும்.
2. வங்கிகளின் வராக்கடன்கள் கடந்த ஆட்சியிலேயே பெரும்  தலைவலியாக பாஜ அரசுக்கு இருந்தது. அருண் ஜெட்லி பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்தாலும், போதுமான பலன் கிடைக்கவில்லை. வராக்கடன் இழப்பால் வங்கிகள் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிதி துறையில் இன்னொரு முக்கிய பிரச்னை, வங்கியில்லாத நிதி நிறுவனங்கள் பிரச்னை. இந்த நிறுவனங்களின் நிதி நிலைமையை சீராக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் செய்ய வேண்டியதாக உள்ளது. இந்த நிறுவனங்களின் நிதி பிரச்னையை தீர்க்க தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
3. இந்தியாவில் 81 லட்சம் பேருக்கு வேலை இல்லை என்று உலக வங்கி சில மாதம் முன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. இது பற்றி பெரும் சர்ச்சை உருவானாலும், இதை கவனித்து சரி செய்ய வேண்டிய நிர்பந்தம் நிதி அமைச்சருக்கு உண்டு. சாதாரண ஊழியர்கள் முதல் தகவல் தொழில்நுட்ப துறைகள் வரை இளைஞர்களுக்கு வேலையின்மை பல மடங்கு  அதிகரித்துள்ளது. படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை. வேலைவாய்ப்பை உருவாக்க நிதி அமைச்சகம் பல வகையில் சிந்திக்க வேண்டும்.
4. கடந்த ஆட்சியில் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவுக்கு தனியார் முதலீடு பெருகவில்லை. இந்த முறை இதை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
5. ஏற்றுமதியில் உள்ள பிரச்னைகள் ஏராளம். நம் ஏற்றுமதி படிப்படியாக குறைந்தது மட்டுமில்லாமல், ரூபாய் மதிப்பு சரிவு உட்பட பல கெடுபிடிகள் உள்ளன. இதனால் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அதிக பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றை சீராக்கி, ஏற்றுமதிக்கு வழிவகை செய்ய வேண்டும்.
6. கிராமப்புற பகுதிகளில் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் சரிய கிராமங்களை அரசு சரிவர கவனிக்காதது தான் என்று பல வல்லுனர்களும் கூறி விட்டனர்.
7. அரசுக்கு நிதி வருவாய் எந்த அளவுக்கு  முக்கியமோ, அந்த அளவுக்கு செலவழிப்பதில் கவனமாக இருப்பதும் முக்கியம். கவர்ச்சி திட்டங்களுக்காக அரசு நிதியை அதிக அளவில் செலவிடுவது நெருக்கடியை ஏற்படுத்தும். உற்பத்தி, வளர்ச்சி பெருகவும், நிதி நெருக்கடியை போக்கவும் கவனம் செலுத்தி, கவர்ச்சி திட்டங்களுக்கு செலவிடுவதில் மிகுந்த எச்சரிக்கை தேவை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெட்ரோல், டீசலுக்கும் ஜிஎஸ்டி?

பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருப்பதற்கு அதன் மீதான வரிகள்தான் காரணம். அதை மாற்றி ஜிஎஸ்டியை அதற்கும் விதித்தால் கண்டிப்பாக விலை குறையும் என்பது பலரும் தெரிவித்துவிட்டனர். ஆனால், மாநில அரசுகள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றன.  அதனால், எங்களால் ஜிஎஸ்டியை இதில் அமல்படுத்த முடியவில்லை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. புதிய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீது ஜிஎஸ்டியை அமல்படுத்தி விலை குறைய வழிவகுக்கும் என்று மக்கள்  எதிர்பார்க்கின்றனர்.

Tags : Nirmala Sitaraman ,finance minister , Unemployment, Exports, Growth Growth, Nirmala Sitaraaman meets, 7 challenges
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...