×

கண்டுகொள்ளுமா காவல்துறை? பைக் ரோமியோக்களால் அதிகரிக்கும் விபத்துக்கள்

தென்தாமரைகுளம்: குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக பைக் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த விபத்துகளில் பெரும்பாலும் அதிவேகமாக செல்லும் இளைஞர்கள் தான் சிக்கி உயிர் பலியாகின்றனர். போலீசார் போதிய அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் விபத்துக்கள் குறைந்த பாடில்லை. பெற்றோர் பிள்ளைகள் மீது கொண்ட பாசம் காரணமாக விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி கொடுப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள், இளைஞர்கள் தங்களை ரோமியோக்கள் என நினைத்துக்கொண்டு பைக்கில் அதிவேகத்தில் சாலையில் பறப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் கொடுமை என்னவென்றால் சில சிறுவர்கள் பெற்றோரை பின்னால் வைத்து கொண்டு செல்போன் பேசியபடி பைக் ஓட்டி செல்வதையும் காணமுடிகிறது. இது சமூக ஆர்வலர்களை மிகவும் வேதனையடைய செய்துள்ளது. ஆபாயத்தை உணராத பெற்றோரும் மகன் பைக் ஓட்டுகிறான் என்ற மகிழ்ச்சியில் செல்கின்றனர்.

மணக்குடியில் இருந்து ஆண்டிவிளைக்கு வரும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த சாலையில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஒரு பைக்கில் 3 முதல் 4 பேரை ஏற்றி கொண்டு வேகமாக வருகின்றனர். பழுதான சாலையில் இப்படி தாறுமாறான வேகத்தில் செல்வது, அந்த வழியாக செல்லும் அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது. எனவே காவல்துறை உடனடியாக இந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தி இளைஞர்கள், சிறுவர்களின் அதிவேக பைக் ரேஸை தடுத்து நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Police, Bike Romeo
× RELATED தேர்தல் முடிவடைந்ததால் திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள்