×

தமிழர்கள் ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக்கலப்பிடத்தை யார் செலுத்த முயன்றாலும் திமுக சகித்துக்கொள்ளாது: ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசை மிரட்டி திட்டத்தை நிறைவேற்றலாம் என கனவு காண்கிறதா பாஜக? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்புயுள்ளார். இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி உடனே கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார். பள்ளிக் கல்வியில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும் என கூறினார். தமிழர்கள் ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக்கலப்பிடத்தை யார் செலுத்த முயன்றாலும் திமுக சகித்துக்கொள்ளாது எனவும் தெரிவித்தார். இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல்வீசி மும்மொழி திட்டத்தை கொண்டுவர நினைக்கக் கூடாது என கூறினார். புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு கனவில் கூட நினைக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டையும், செம்மொழியாம் தாய்த் தமிழைச் சிறுமைப்படுத்தி ஒதுக்கவும், மொழிவாரி மாநிலங்களின் தேசிய உணர்வுகளில் வெந்நீர் ஊற்றும் விதத்திலும்,ப்ரீ ஸ்கூல் முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்தி வழிக் கல்வி என்ற விபரீதமாக நாட்டைப் பிளவுபடுத்தும் பரிந்துரையை புதிய கல்விக் கொள்கைவகுக்கும் குழு அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மொழி உணர்வு தமிழர்களின் ரத்தத்தில் இரண்டறக் கலந்தது. அந்த ரத்தத்தில் இந்தி என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது,கடுமையாக எதிர்த்துப் போர்தொடுக்கும். தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் தூண்டிவிட்டு மீண்டுமொரு மொழிப் போராட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு வழி அமைத்து விடாது என்றே இன்னும் நம்புகிறேன் என கூறினார். இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும் என்று பிரதமர் பண்டித நேருவின் உறுதிமொழி இன்னும் நாடாளுமன்றத்தின் பதிவேடுகளில் இருக்கிறது. இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தின் மீது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்று இனி பள்ளிகளில் இந்தி வேண்டாம் என்று 50 வருடங்களுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டது இன்னும் சட்டமன்றப் பதிவேடுகளில் இருக்கிறது என சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல் வீசி, மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்று மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தன் கனவின் ஓரத்தில் கூட நினைத்துப் பார்க்க எத்தணிக்கக் கூடாது. அப்படிப்பட்ட பேராசைக்கனவும் அதற்காகப் பிழையான காரியமும் அவர்களுக்குப் பேரிடரை ஏற்படுத்திவிடும் என்று தெரிவித்துள்ளார்.



Tags : anyone ,DMK ,Tamils ,Stalin , DMK, not tolerate,anyone, pay , mandate , Hindi,Tamil blood, Stalin's revenge on BJP
× RELATED மக்களுக்கு துரோகம் செய்வதையே...