×

பாபநாசம் அணை வறண்டதால் செத்து மிதந்த மீன்கள் அணையில் இருந்த முதலைகளின் கதி என்ன?

* பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

நெல்லை : பாபநாசம் அணையில் மீன்கள் செத்து மிதந்த நிலையில் அணையில் இருந்த முதலைகளின் கதி என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது. முதலைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 143 அடியாகும். மொத்தம் 5 ஆயிரத்து 500 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும். இந்த அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

பாபநாசம் அணை ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நிரம்புவது வழக்கம். அதாவது அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிடைக்கும் மழையின் மூலம் டிசம்பர் முதல் வாரத்தில் அணை நிரம்பி விடும். ஆனால் கடந்த ஆண்டு அணை நிரம்பவில்லை. அதற்கு முன்பே கனமழை காரணமாக பாபநாசம் அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் அணை நிரம்பாமல் போனது.

அணை நிரம்பி மறுகால் பாய்வதன் மூலம் அந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் செல்லும். அப்போது தாமிரபரணியின் மூலம் பாசனம் பெறும் குளங்கள் அனைத்தும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நிறைந்து விடும். இதன் மூலம் இரு மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் பாசனத்திற்கும் தண்ணீர் கிடைக்கும். அப்போது அணை தண்ணீரை வறட்சி காலங்களில் பயன்படுத்த முடியும். ஆனால் கடந்த ஆண்டு நிலைமை தலைகீழானது. அணை நிரம்பாத நிலையில் பிசான பருவ நெல் சாகுபடிக்கு முழுவதும் தண்ணீர் திறந்து விட்டதால் பாபநாசம் அணை வறண்டு விட்டது.

ஏப்ரல், மே மாதங்களில் கடும் கோடை வெயில் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு வறண்டு 10 அடிக்கும் கீழாக குறைந்தது. இதனால் பரந்து விரிந்து காட்சியளிக்கும் அணை சிறிய குட்டை போன்று மாறி விட்டது. வறட்சியால் பாபநாசம் அணையில் இருந்த மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியான பிறகே மீன்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அணையில் இருந்த மீன்கள் அனைத்தும் செத்து மிதந்த நிலையில் அணையில் வசித்து வந்த முதலைகளின் கதி என்ன? என்ற கேள்வி வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாபநாசம் அணையில் 25க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் தண்ணீரின் மேல்பரப்பில் தலையை நீட்டிக் கொண்டிருப்பது பொதுப்பணித்துறை, வனத்துறை, அணையை கண்காணிக்கும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் என அனைவருக்கும் தெரியும். முதலைகள் நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை கொண்டவை (semi Aquatic) என்றாலும் சிறிது நேரம் மட்டுமே நிலத்தில் இருக்கும். பெரும்பாலும் தண்ணீரில்தான் வசிக்கும். எனவே முதலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வன  உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், பாபநாசம் அணை வறண்டு மீன்கள் செத்து மிதந்துள்ள நிலையில், அதில் இருக்கும் முதலைகளை பாதுகாக்க வேண்டும். அணையில் அதிகபட்சம் 25 முதலைகள் வரை இருக்கும். எனவே இந்த முதலைகளை பாதுகாக்க அவற்றை வனத்துறை மூலம் பிடித்து சேர்வலாறு அணையில் தண்ணீர் இருப்பதால் அங்கு கொண்டு பாதுகாப்பாக விட வேண்டும். இதன் மூலம் அந்த உயிரினம் பாதுகாக்கப்படும். முதலை தானே என அதிகாரிகள் அலட்சியம் காட்டக் கூடாது. வன உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் அணையில் உள்ள முதலைகளையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Papanasam Dam , Crocodile ,Papanasam dam,water,dried , heavy drought
× RELATED பாபநாசம் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை குறைக்க வேண்டும்