×

நெல்லை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை அருகே குடிசைமாற்று வாரியத்தின் 480 வீடுகள் தயாராகிறது

* ரூ.44 கோடியில் கட்டுமான பணிகள் தீவிரம்

நெல்லை : நெல்லை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை அருகே மலைப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் 480 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட வீடில்லாத ஏழைகளுக்கு இவ்வீடுகள் ஒதுக்கப்படுகிறது. நெல்லை குடிசை மாற்று வாரியம் சார்பில் ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை அருகே வீடில்லாத ஏழைகளுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன. தாமிரபரணி ஆற்று கரையோரத்தில் கைலாசபுரத்தில் ஆக்கிரமித்து குடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஏற்கனவே ரெட்டியார்பட்டியில் வீடு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.

இதன் அடுத்த பகுதியாக தற்போது ரெட்டியார்பட்டி மலையடிவாரத்தில் 480 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.44.2 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிளாக்கிற்கு 32 வீடுகள் வீதம், மொத்தம் 15 பிளாக்குகளில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பிளாக்கிலும் 4 மாடிகளோடு வீடுகள் அமைக்கப்பட உள்ளது. தற்போது இடங்கள் அளக்கப்பட்டு, அஸ்திவாரத்தோடு கான்கிரீட் தூண்களும் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு வீடும் முன் அரங்கு, படுக்கையறை, சமையலறை என 400 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. இவ்வீடுகளுக்கு தனிநபர் பங்களிப்பு ரூ.1.67 லட்சம் போக, மீதமுள்ள தொகை மானிய விலையில் அரசால் கட்டி கொடுக்கப்பட உள்ளது.

 இவ்வீடுகள் கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில், 15 மாத காலத்திற்குள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாளை இலந்தகுளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்போர், பாளை சிவன்கோயில் தெப்பக்குளம் அருகே ஆக்கிரமிப்பில் இருப்போர், வெட்டுவான்குளம், பிள்ளைகுளத்தில் குடியிருப்போர் இதில் பயனாளிகளாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் அவர்கள் அங்கு குடியமர்த்தப்பட உள்ளனர்.

குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு தேவையான சாலை வசதி, தண்ணீர் மற்றும் கழிவு நீரோடை வசதி, பூங்கா வசதிகளும் அப்பகுதியிலே தற்போது தனியே ஏற்படுத்தப்பட்டு அதற்கான கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன. நெல்லை மாநகராட்சியின் பாதாள சாக்கடை விரிவாக்க பணிகள் இரண்டாம் கட்டத்தில் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிள் சாக்கடை குழாய்கள் இணைக்கப்பட உள்ளது.

Tags : Nile Reddyarpatti ,home ,houses ,cottage board , nellai , fourways,Slum Clearance Board
× RELATED கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100...