×

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் தண்ணீரின்றி காய்ந்த கரும்புகள் கால்நடைகளுக்கு தீவனமாக மாறிய பரிதாபம்

* உரிய நிவாரணம் கேட்டு கண்ணீர் விடும் விவசாயிகள்

பெரணமல்லூர் :  பெரணமல்லூர் பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக பயிரிட்ட கரும்பு பயிர்கள் கருகி கால்நடைகளுக்கு தீவனமாக மாறி உள்ளது. நஷ்டமடைந்துள்ள தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போய் பல மாவட்டங்கள் வறட்சியால் தத்தளித்து வருகின்றன. இதில் திருவண்ணாமலை மாவட்டம் கடந்த சில மாதங்களாகவே  வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.

குறிப்பாக இந்த ஆண்டு கோடையில் சுட்டெரிக்கும் வெயிலும் சேர்ந்து நிலத்தடி நீர்ட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது. குடிநீருக்கும், விவசாயத்துக்கும் போதிய தண்ணீரின்றி தவிக்கும் நிலை உள்ளது. இதனால் நாள்தோறும் மழை வேண்டி நூதன வேண்டுதல்களையும், பூஜைகளையும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக பெரணமல்லூர் வட்டாரத்தில் கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தாங்கள் பயிரிடும் நிலப்பரப்பின் அளவை குறைத்து  விவசாயம் செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் பருவ மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு சாகுபடியில் இறங்கிய விவசாயிகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

போதிய தண்ணீரின்றி கரும்புதோட்டங்கள் முழுவதும் கருகி உள்ளன. இனிமேல் மழை பெய்தாலும் பயனில்லை என்ற நிலையில் கருகிப்போன கரும்பு தோட்டங்களில் கண்ணீருடன் தங்களது கால்நடைகளை விட்டு தீவனமாக்கி வருகின்றனர். இதுகுறித்து  பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கூறியதாவதுது: ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை நன்கு பெய்து வந்தபோது பெரணமல்லூர் வட்டாரத்தில் மட்டும் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்து செய்யாறு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி லாபம் பார்த்து வந்தோம்.

அதேபோல் இந்த ஆண்டும் பருவ மழை மற்றும் கோடை மழையை நம்பி கரும்பு நடவு செய்தோம். அதேநேரத்தில் சாகுபடி பரப்பை குறைத்து 600 ஏக்கர் அளவில் கரும்பு நடவு செய்தோம். ஆனால் பருவ மழை, கோடை மழை பொய்த்து போய், சுட்டெரிக்கும் கோடை வெயிலில் நடவு செய்த கரும்பு பயிர்கள் வளராமல் கருகி போயின. எங்கள் கண் முன்பே நாங்கள் நடவு செய்த கரும்பு பயிர்கள் மாடுகளுக்கு தீவனமாக மாறி வருவதை கண்டு கண்ணீர் வடிக்கிறோம். குறிப்பாக 6 மாதம் கடந்த கரும்பு பயிர் சுமார் 6 அடி உயரம் வளர்ந்து இருக்க வேண்டும். ஆனால் இந்த கடும் கோடை வெப்பத்தால் அந்த பயிர்கள் மூன்றடி உயரமே வளர்ந்து காய்ந்து போயுள்ளது.

ஒரு ஏக்கருக்கு கரும்பு நன்றாக வளர்ந்தால் சுமார் 40 டன் வரை கரும்பு எங்களுக்கு கிடைக்கும். தற்போதுள்ள நிலையில் 15 டன் கூட கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது.   தவிர நாங்கள் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு பயிருக்கு  ஏக்கருக்கு ₹42 ஆயிரம் கடன் பெற்றுள்ளோம். இதே நிலை நீடித்தால் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு உரிய கூலி கொடுக்க முடியாமல் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகும் நிலையே ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சர்க்கரை ஆலையிடம் பெற்ற கடன் தொகை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டு நஷ்டத்தில் உள்ள எங்களுக்கு அவர்கள் பிடிக்கும் இன்சூரன்ஸ் பணத்தையாவது திரும்பக் கொடுத்தால் நன்றாக இருக்கும். இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு  கரும்பு நடவு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க முன் வரவேண்டும்’ என்று வேதனையுடன் கோரிக்கை வைத்தனர்.

கடனை திரும்ப கேட்டு மிரட்டும் சர்க்கரை ஆலை

பெரணமல்லூர் மேல்நெமிலியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியின் மனைவி அலமேலு கூறும்போது, ‘பயிரிட்ட கரும்புகள் காய்ந்துபோனதால் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையில் உள்ளோம். இந்த நிலையில் செய்யாறு சர்க்கரை ஆலையில் நாங்கள் பெற்ற கடனான ₹20 ஆயிரத்தை உடனே கட்டும்படி ஆலை நிர்வாகம் ஆட்களை அனுப்பி மிரட்டுகிறது. நட்ட கரும்பு பயிர் காய்ந்து போனதற்கு நாங்கள் காரணமில்லை. நாங்கள் நஷ்டமடைந்துள்ளோம். இந்த நேரத்தில் கடனை திரும்ப செலுத்த கேட்டு தொல்லை தருவது எந்த வகையில் நியாயம்?’ என்றார்.


Tags : district ,Thiruvannamalai , tiruvannamalai , sugar cane, dried, drought , water
× RELATED இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு...