×

‘விபத்தில்லாத திருச்செந்தூர்’ திட்டம் இன்று முதல் அமல் ‘ஹெல்மெட்’ அணிந்தால் மட்டுமே பெட்ரோல்

திருச்செந்தூர் :  ‘விபத்தில்லாத திருச்செந்தூர்’ என்ற இலக்கை நிர்ணயித்து திருச்செந்தூரில் ‘ஹெல்மெட்’ அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. இதற்கு முன்னோடியாக ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல்  நேற்று வழங்கப்பட்டது. விபத்தினால் ஏற்படும் பெரும்பாலான மரணங்கள், தலை காயங்களாலேயே ஏற்படுகின்றன. எனவே, தலைக்காயத்தை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வந்தால்தான் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் வழங்கப்படும் என்ற திட்டத்தை திருச்செந்தூர் டிஎஸ்பி பாரத், கடந்த வாரம் அறிவித்தார்.

 இத்திட்டத்துக்கு திருச்செந்தூர் சப்-டிவிஷனுக்குட்பட்ட ெபட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து வரவேற்றுள்ளனர். இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு முன்னோடியாக திருச்செந்தூர் பஸ் நிலையம் எதிரே உள்ள பெட்ரோல் பங்க்கில், இலவச பெட்ரோல் வழங்கும் விழிப்புணர்வு  திட்டத்தை டிஎஸ்பி பாரத்  நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது காலை 9 மணி முதல் 12 மணி வரை திருச்செந்தூர் சுற்றுப்புறங்களில் உள்ள 13 பங்குகளில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த தலா 30 பேருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் திருக்கோயில் இன்ஸ்பெக்டர் பாலாஜி, போக்குவரத்து எஸ்ஐ கருப்பசாமி, எஸ்ஐ மேரிராணி, பங்க் அதிபர்கள் சுதர்சன் வடமலைபாண்டியன், ஹரிகிருஷ்ணன் வடமலைபாண்டியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 திருச்செந்தூரில் ‘ஹெல்மெட் கட்டாயம்’ திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதால் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கும்படி திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


Tags : Petrol bunk, tiruchendur, petrol, helmet, accident
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...