×

பிரதமர் மோடி பற்றி சர்ச்சைக் கருத்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் பாஜகவினர் புகார்

சென்னை: பிரதமர் மோடி பற்றி சர்ச்சைக் கருத்து வெளியிட்டதாக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக இளைஞர் அணி சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில  துணை செயலாளராக இருந்து வரும் பேராசிரியர் சுந்தரவள்ளி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தை படிக்க நேரிட்டது. அதில் அவர், “ஜனநாயக முறைப்படியே மோடியை துடைத்தெறிய எண்ணுகிறோம். முடியாதென்றால் வரலாறு காட்டும் வழியை தயங்காது தேர்வு செய்வோம்” என்று பதிவிட்டிருக்கிறார். அதற்கு லெனின் என்ற மணவாளன் என்ன வழி  தோழர் என்று பதிவிடுகிறார். அதற்கு சுந்தரவள்ளி, “ஆயுதம் தான்” என்று பதில் பதிவிட்டுள்ளார்.

சுந்தரவள்ளியின் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு சர்ச்சைக்குரிய பேசு பொருளாகவும் மாறியிருக்கிறது. பிரதமரை ஆயுதத்தால் அகற்றுவோம் என்று பதிவிடுவதன் மூலம் பிரதமர்  மோடியை பயங்கரவாதத்தின் மூலம் படுகொலை செய்வோம் என்ற பொருளில் கூறியிருக்கிறார்.  சுந்தரவள்ளி பிரதமரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த சதி செய்யலாம் என்ற நியாயமான ஐயப்பாடும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.  மேலும் தனது பயங்கரவாத கருத்தினை சமூக வலைத்தளத்தில் பரப்பி ஆதரவு தேடும் விதமாகவும் உள்ளது. எனவே, பேராசிரியை சுந்தரவள்ளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

Tags : police commissioner , PM Modi, Professor, BJP
× RELATED கஞ்சா விற்ற 40 பேர் கைது