×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் பெடரர்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூடுடன் (63வது ரேங்க்) நேற்று மோதிய பெடரர் (3வது ரேங்க்) 6-3, 6-1, 7-6 (10-8) என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 11 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் ஸ்லோவகியா வீரர் மார்டின் கிளிஸான் 7-6 (7-4), 2-6, 6-3, 3-6, 9-7 என்ற செட் கணக்கில் 4 மணி, 7 நிமிடம் போராடி பிரான்ஸ் வீரர் லூகாஸ் பவுல்லியை வீழ்த்தினார். பிரான்ஸ் வீரர் பெனாட் பேரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளார். பிளிஸ்கோவா அதிர்ச்சி: மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (2வது ரேங்க்) 3-6, 3-6 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் பெத்ரா மார்டிச்சிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா, செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ருசோவா ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கயா கானெபி (எஸ்டோனியா), லெசியா சுரென்கோ (உக்ரைன்) ஆகியோர் 2வது சுற்றில் வெற்றியை பதிவு செய்தனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - மரியஸ் கோபில் (ரோமானியா) இணை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்சின் பெஞ்சமின் போன்ஸி - அந்தோனி ஹோங் ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் திவிஜ் ஷரண் - மார்செலோ டெமோலினர் (பிரேசில்) ஜோடி 3-6, 4-6 என்ற நேர் செட்களில் ஹென்றி கோன்டினன் (பின்லாந்து) - ஜான் பியர்ஸ் (ஆஸி.) ஜோடியிடம் தோற்று வெளியேறியது.


Tags : Federer ,round ,French Open , Federer , French Open 4th round
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...