×

ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் நடப்பு சாம்பியனுக்கு ஈடுகொடுக்குமா ஆப்கானிஸ்தான்

பிரிஸ்டல்: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதுகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் இந்த தொடரில், மொத்தம் 10 அணிகள் ரவுண்டு ராபின் லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. தொடரின் 3வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கார்டிப் வேல்ஸ் அரங்கில், இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கும் போட்டியில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் மாலை 6.00 மணிக்கு தொடங்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியுடன் கற்றுக்குட்டியான ஆப்கானிஸ்தான் மோதுகிறது. இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்ததால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்குகின்றனர். காயம் அடைந்துள்ள தொடக்க வீரர் டேவிட் வார்னர் முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயராவாரா என்பது மட்டுமே ஆஸி அணி நிர்வாகத்துக்கு இருக்கும் ஒரே கவலை. மற்றபடி அனைத்து வீரர்களுமே நல்ல பார்மில் உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக 12 ரன் வித்தியாசத்திலும், இலங்கைக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்திலும் பெற்ற வெற்றி அவர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது.

அதே சமயம், பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற ஆப்கானிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. எனினும், ஆப்கன் அணியை குறைத்து மதிப்பிடுவது தப்புக்கணக்காகவே இருக்கும் என்பதை ஆஸி. வீரர்களும் நன்கு உணர்ந்துள்ளனர்.குறிப்பாக, ஆல் ரவுண்டர் ரஷித் கான் ஆட்டத்தின் போக்கை அடியோடு மாற்றக் கூடியவர். முக்மது நபி, அஸ்கர் ஆப்கன், கேப்டன் குல்பாதின் முகமது ஷாஷத் ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் ஆஸி. அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். இரண்டு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், பேட் கம்மின்ஸ், ஜேசன் பெஹரண்டார்ப், நாதன் கோல்டர் நைல், ஆடம் ஸம்பா, நாதன் லயன். ஆப்கானிஸ்தான்: குல்பாதின் நயிப் (கேப்டன்), அஸ்கர் ஆப்கன், ஹமித் ஹசன், ஹஸ்ரத் ஸசாய், முகமது ஷாஷத் (விக்கெட் கீப்பர்), நஜிபுல்லா ஸத்ரன், ரகமத் ஷா, ஷமியுல்லா ஷின்வாரி, அப்தாப் ஆலம், தவ்லத் ஸத்ரன், ஹஷ்மதுல்லா ஷாகிதி, முகமது நபி, முஜீப் உர் ரகுமான், நூர் அலி ஸத்ரன், ரஷித் கான்.

Tags : Conflict ,Australia ,Afghanistan , Conflict , Australia today,champion of Afghanistan
× RELATED மனித உரிமைகள் பிரச்சனை காரணமாக...