7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ்

நாட்டிங்காம்: உலக கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக், பகார் ஸமான் களமிறங்கினர். இமாம் உல் ஹக் 2 ரன் மட்டுமே எடுத்து காட்ரெல் வேகத்தில் விக்கெட் கீப்பர் ஹோப் வசம் பிடிபட, பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பகார் ஸமான் 22 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஹரிஸ் சோகைல் 8 ரன் எடுத்து ரஸ்ஸல் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பாபர் ஆஸம் 22 ரன் எடுத்து ஓஷேன் தாமஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த இமத் வாஸிம் 1, ஷதாப் கான் 0, ஹசன் அலி 1 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுக்க, பாகிஸ்தான் 81 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து பரிதாபமாக விழித்தது.

ஓரளவு தாக்குப்பிடித்த முகமது ஹபீஸ் 16 ரன், வகாப் ரியாஸ் 18 ரன் எடுத்து தாமஸ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, பாகிஸ்தான் அணி 21.4 ஓவரிலேயே 105 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முகமது ஆமிர் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் தாமஸ் 5.4 ஓவரில் 27 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 3, ரஸ்ஸல் 2, காட்ரெல் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 50 ஓவரில் 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. கிறிஸ் கேல், ஷாய் ஹோப் இருவரும் துரத்தலை தொடங்கினர். ஹோப் (11 ரன்), டேரன் பிராவோ (0) இருவரும் முகமது ஆமிர் வேகத்தில் வெளியேறினர். வழக்கம் போல அதிரடியாக விளையாடிய கேல் அரை சதம் விளாசினார். அவர் 50 ரன் எடுத்து (34 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஆமிர் பந்துவீச்சில் ஷதாப் கான் வசம் பிடிபட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தியது. நிகோலஸ் பூரன் 34 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில், முகமது ஆமிர் 6 ஓவரில் 26 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. அந்த அணியின் ஓஷேன் தாமஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Tags : West Indies ,Pakistan , West Indies - Pakistan , 7 wickets
× RELATED மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3...