வியாபாரியை மிரட்டி 80 ஆயிரம் லஞ்சம் சென்னை கமிஷனர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் : மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை:  வியாபாரியை மிரட்டி 80 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் ராஜேஷ், சன்னிலார்டு, அசோக்குமார், ஆனந்தன் ஆகியோர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு அறையில், வெளிநாட்டில் இருந்து மின்னணு பொருட்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் சாகுல் அமித் என்பவர் தங்கி இருந்தார். அவரது அறையில் 90 லேப்டாப், 500 செல்போன்கள், 30 கிராம் தங்கம் இருந்தது. ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லை. அப்போது, 4 காவலர்களும் வியாபாரி சாகுல் அமித்தை மற்றொரு லாட்ஜிக்கு அழைத்து சென்று, ‘‘உங்களின் நகை, லேப்டாப், செல்போன்களை பறிமுதல் செய்யாமல் இருக்க, ₹2 லட்சம் கொடுக்க வேண்டும்,’’ என மிரட்டி உள்ளனர். அதற்கு, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி, ₹80 ஆயிரத்தை 4 காவலர்களுக்கும் லஞ்சமாக ெகாடுத்துள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட வியாபாரி சாகுல் அமித் இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் திருவல்லிக்கேணி துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். விசாரணையில், 4 காவலர்களும் வியாபாரியை மிரட்டி ₹80 ஆயிரம் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 4 காவலர்களும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தியது, சட்டத்தை மீறியது மற்றும் காவல் துறை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் காவலர்களான ராஜேஷ், சன்னிலார்டு, அசோக்குமார், ஆனந்தன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்த செய்தி நேற்றைய தினகரன் நாளிதழில் வெளிவந்தது. இதை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், அந்த 4 காவலர்கள் மீது ஏன் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது மனித உரிமை மீறல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இது சம்பந்தமாக விசாரணை செய்து போலீஸ் கமிஷனர் 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : Commissioner ,Chennai , 80 thousand bribe, Chennai Commissioner, file a report , 4 weeks
× RELATED வடசென்னை பகுதிகளில் புதிதாக 500...