×

டிரம்புடன் நடத்திய பேச்சு தோல்வி அடைந்ததால் ஆத்திரம் வடகொரிய அதிகாரிகளை சுட்டுக் கொன்றார் ஜோங்

சியோல்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஹனோயில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இந்த பேச்சுவார்த்தைக்காக நியமித்த அதிகாரிகள் 5 பேரை சுட்டுக் கொன்றார். தனது மொழி பெயர்ப்பாளரை சிறையில் அடைத்தார்.  வடகொரியா அடிக்கடி அணு ஆயுதங்களை சோதனை செய்ததால், அதன் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதையடுத்து, இரு நாடுகளும் 2 கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் நடத்திய வரலாற்று பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது. இதைத் ெதாடர்ந்து, கடந்த பிப்ரவரியில் வியட்நாமின் ஹனோய் நகரில் 2ம் கட்ட  பேச்சுவார்த்தை நடந்தது. இதில், டிரம்ப்பும் கிம் ஜோங்கும் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எதுவும் ஏற்படாமல் முடிந்தது. மேலும், இந்த பேச்சுவார்த்தையின் போது திடீரென கோபமடைந்த டிரம்ப், ‘பேச்சுவார்த்தை முடிந்தது. எந்த ஒப்பந்தமும் கிடையாது’ என கோபத்துடன் கூறியபடி, திடீரென எழுந்து சென்று விட்டார். இது, கிம் ஜோங்குக்கு பெரிய அவமானத்தை அளித்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர் நாடு திரும்பியதும் கொடூரமான சில செயல்களை செய்ததாக தென்கொரிய பத்திரிக்கையான ‘சோசன் எல்போ’ திடுக்கிடும் செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்த வடகொரிய சிறப்புக் குழுவை சேர்ந்த கிம் ஹியோக் சோல், அதிபர் கிம்முடன் ரயிலிலும் பயணம் செய்தார்.  இந்த நிலையில், நாடு திரும்பியதும் சோல் உள்பட 5 அதிகாரிகளை மரண தண்டனை குழு  சுட்டுக் கொன்றுள்ளது. இது பற்றி தென்கொரிய பத்திரிகையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு: சிறப்பு அதிகாரி கிம் ஹியோக் சோல், கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் வடகொரியாவின் மிரிம் விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் 4 மூத்த வெளியுறவுத் துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு 5 பேர் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடகொரிய அதிபரை காட்டிக் கொடுத்ததை தொடர்ந்து துப்பாக்கி சுடும் குழுவினர், சிறப்பு தூதுக்குழுவினர் 5 பேரையும் கொலை செய்துள்ளனர். மேலும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் பெண் மொழி பெயர்ப்பாளரான சின் ஹைங்  கைது செய்யப்பட்டுள்ளார். கிம்மின் புதிய பரிந்துரையை சரியாக மொழி பெயர்க்காததால் ஹைங் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யபபடுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரிய நாடுகள் இடையேயான உறவு விவகாரத்தை கையாளும் தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம், இந்த தகவல் குறித்து கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டது. அதேபோல், வடகொரியாவும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

Tags : Jong ,speech ,North Korean , Jong , shot dead , North Korean authorities , failure
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...