×

மோடியின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு அனைத்து விவசாயிகளுக்கும் 6000: விவசாய தொழிலாளர்கள், சில்லரை வியாபாரிகளுக்கு பென்ஷன்

புதுடெல்லி: தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தேர்தலில் அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டது. ஏழை விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கும் திட்டம், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சில்லரை வர்த்தகர்கள் 3 கோடி  பேருக்கும், ராணுவ வீரர்களின் விதவை மனைவிகள், அவர்களின் பிள்ளைகளுக்கான படிப்பு உதவித் தொகையும் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.    பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிஷான் சம்மன் சித்தி என்ற பெயரில் ஆண்டுக்கு ரூ.6,000  உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2 ஹெக்டேர் வரை நிலம் கொண்ட சிறு, குறு விவசாயிகள் 12 கோடி பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்த தொகை ரூ,2000 வீதம், 3 தவணைகளாக  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி 3.11 கோடி சிறு விவசாயிகள் முதல் தவணை ரூ.2000த்தை பெற்றுள்ளனர். மேலும் 2.75 கோடி விவசாயிகள் 2வது தவணையாக ரூ.2000 வீதம்  பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.  இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் விவசாயிகள், சில்லரை வர்த்தகர்கள், இறந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகள், பிள்ளைகளுக்கு படிப்பு உதவித் தொகை வழங்குவது உட்பட பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜ. 303 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மை பெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மோடியும், அவருடைய அமைச்சரவையும் பதவியேற்றது. அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று காலை ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரங்கள் வருமாறு:


* தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, ஏழை விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், கூடுதலாக 2 கோடி  விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

* மேலும், விவசாயிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் ரூ.10,774 கோடியில் செயல்படுத்தப்படும்.
* விவசாயிகளுக்கான கிஷான் திட்டத்தின் கீழ் முன்பு ரூ.12,000 கோடி செலவாகும்  என கணக்கிடப்பட்டது. தற்போது, இந்த நிதிச்சுமை ரூ.87217.50 கோடியாக  அதிகரிக்கும்.
*  சிறு விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதம் ரூ.3000 கிடைக்கும்
* விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் 5 கோடி சிறு மற்றும் குறுவிவசாயிகள் முதல் 3 ஆண்டுகளில் பயன்பெறுவார்கள்
* பதிவு செய்த விவசாயி இறந்துவிட்டால் அவரது மனைவி 50 சதவீத ஓய்வூதியத்தை பெற முடியும்.
* சில்லறை வியாபாரிகள், கடைக்காரர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 3 கோடி பேர் பயன்பெறுவார்கள்
*  ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்தும், மாவோயிஸ்ட் அல்லது தீவிரவாத தாக்குதலின் போது உயிர்தியாகம் செய்த மாநில போலீசாருக்கு தேசிய பாதுகாப்பு நிதியை விரிவுப்படுத்துவது எனவும்  முடிவு எடுக்கப்பட்டது.  இதன்படி, ராணுவத்தில் பணியாற்றிய விதவை அல்லது முன்னாள் ராணுவத்தினரின் மகன்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை தற்போதுள்ள மாதம் ரூ.2,000த்தில் இருந்து 2,500 ஆக உயர்த்தப்படுகிறது.  இதேபோல் மாணவிகளுக்கு ரூ.2250 என்பதில் இருந்து ரூ.3000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
* ராணுவத்திற்கு மட்டும் உள்ள இந்த உதவித்தொகை திட்டம், மாவோயிஸ்ட் தாக்குதலின் போது உயிரிழக்கும் மாநில போலீசாரின் குடும்பத்திற்கும் விரிவுபடுத்தப்படுகிறது. தேசத்தை பாதுகாக்கும் வீரர்களின் நலன் காக்கும் வகையில் இந்த  திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* இந்த கல்வி உதவித்தொகை திட்டம், தொழில்நுட்ப மற்றும் எம்பிஏ எம்சிஏ மருத்துவம் மற்றும் என்ஜினியரிங் மற்றும் பட்டமேற்படிப்பு படிக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும்.
* நாடு முழுவதும் 3 கோடி சில்லறை வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் பயன்பெறும் வகையில் பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்கள் 60 வயது ஆனதும் ஓய்வூதியம்  பெறமுடியும். இந்த திட்டம் அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி வர்த்தகர்களுக்கு விரிவுப்படுத்தப்படும். 18 முதல் 40 வயது வரையிலான வர்த்தகர்கள் இதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.

17ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர்
கடந்த பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சராக இருந்த பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு, மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முழு  பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான தேதி குறித்து விவாதிக்கப்பட்டது.  அதில், 2019-20ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 17ம் தேதி தொடங்கி ஜூலை 26ம்  தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஜூலை 5ம் தேதி முழு ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

Tags : cabinet meeting ,Modi ,retailers , Announcing Modi's first cabinet meeting to all farmers 6000: Pension for farmers and retailers
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...