×

நிதிஷ் குமார் திட்டவட்ட அறிவிப்பு மத்திய அமைச்சரவையில் இனியும் சேர மாட்டோம் : கூட்டணிக்கு அமைச்சர் பதவி தருவதில் அறிவுரை

பாட்னா: ‘‘மத்திய அமைச்சரவையில், கூட்டணிகளுக்கு கட்சிகளுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும், அடையாள பிரதிநிதித்துவம் இருக்க கூடாது,’’ என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தியுடன் கருத்து தெரிவித்துள்ளார். தே.ஜ கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி உள்ளது. பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் பாஜ 17 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும் வென்றன.  மோடி அரசு பதவி ஏற்பு விழாவுக்கு முன் மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்குவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பாஜ ஆலோசனை நடத்தியது. அதன்படி, பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் பா.ஜ தலைவரர் அமித் ஷா கடந்த புதன் கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு இரண்டு இடங்கள் வேண்டும் என நிதிஷ் கேட்டார். அதற்கு பதில் அளித்த அமித்ஷா, கூட்டணி கட்சிகளுக்கு ஒவ்வொன்றுக்கும் அடையாள பிரதிநிதித்துவமாக அமைச்சரவையில் ஒரு இடம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நிதிஷ், அரசில் இடம் பெற மறுத்து விட்டார்.

மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு நேற்று பாட்னா திரும்பிய பிறகு நிதிஷ் குமார் கூறியதாவது: பீகாரில் தே.ஜ கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, பீகார் மக்களுக்கு கிடைத்த வெற்றி. இதில் யாருக்கும் எந்த குழப்பமும் இருக்கக் கூடாது. இதை யாராவது தனிப்பட்ட வெற்றியாக கருதினால் அது மாயைதான். மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு அடையாள பிரதிநிதித்துவம் அளிக்க பாஜ விரும்பினால், அது எங்களுக்கு தேவையில்லை என கூறி விட்டோம். அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு உண்மையான பங்கு விகிதாச்சார அடிப்படையில் இடம் அளிக்கப்பட வேண்டும். மத்திய அமைச்சரவையில் அடையாள பங்கீடு பெறுவதற்கு எங்களுக்கு ஆசை இல்லை. ஆனால், நாங்கள் பாஜ.வுடன் தான் இருப்போம்.  பாஜ.வுக்கு தனிப் பெரும்பான்மை உள்ளது. இனிமேல், அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டாலும், அதில் ஐக்கிய ஜனாத தளம் இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு நிதிஷ் கூறினார்.   


Tags : Nitish Kumar ,Cabinet of Ministers , Nitish Kumar , Union Cabinet anymore
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...