×

பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடியுடன் ரஜினி திடீர் சந்திப்பு

சென்னை: டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்த அரங்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் ரஜினிகாந்த் திடீரென சந்தித்து பேசினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வெற்றிபெற்றது. இதையடுத்து 2வது முறை பிரதமராக மோடி நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இதற்கான கோலாகல விழா இரவு 7 மணிக்கு டெல்லியில் நடந்தது. மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி  தலைவர்களும் சென்று இருந்தனர். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தமிழகத்தை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை.

அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி  லதா ரஜினிகாந்துடன் நேற்று முன்தினம் டெல்லி சென்று மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.விழா அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வரிசையில் அமர்ந்து இருந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் விழா  அரங்கத்திற்குள் வந்தார். முதல்வர் எடப்பாடியை பார்த்ததும், ரஜினி நேரில் சென்று அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். சட்டமன்ற தேர்தலில் 9 எம்எல்ஏக்கள்  வெற்றிபெற்றதற்கும் ரஜினி வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்வர் எடப்பாடி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 10.15 மணிக்கு சென்னை வந்தார். அதேபோன்று அமைச்சர்களும் நேற்று சென்னை வந்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் சென்னை திரும்பவில்லை. டெல்லியிலேயே தங்கியுள்ளார்.

Tags : Oommen Chandy ,Rajini ,meeting , Prime Minister Modi, Chief Minister Edappadi, Rajini
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...