×

8 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலத்தில் விவசாயிகள் போராட்டம்: தேர்தல் தோல்விக்கு பழி தீர்க்க முயற்சி என குற்றச்சாட்டு

சேலம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலை பணியை தொடரக்கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதால், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலத்தில் விவசாயிகள்  போராட்டம் நடத்தினர்.
சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய விளை நிலங்கள், மலை, ஏரி, குளங்களை அழித்து அமைக்கப்பட உள்ள இச்சாலைக்கு விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும்  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், விவசாயிகள் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கான அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனிடையே. நாடாளுமன்ற தேர்தல் வந்ததால், மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எவ்வித மேல்முறையீடும் செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று, சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்  நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் தமிழக அரசும் மேல்முறையீடு செய்துள்ளன. இதை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மேல்முறையீடுக்கு விவசாயிகளும்,  இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்படி, சேலம் குப்பனூர், பருத்திக்காடு, ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று மதியம், பருத்திக்காட்டில் உள்ள சீனிக்காடு என்னும் இடத்தில் விளை நிலத்தில் கருப்பு  கொடி கட்டி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் தமிழக முதல்வரை கண்டிக்கிறோம் என கோஷங்கள் எழுப்பினர். பூலாவரியில் அந்த பகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகள்  போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கின்ற எந்த திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தேர்தலில்  பெரும் தோல்வியை சந்தித்தபின், மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்றத் துடிக்கிறார். தேர்தல் தோல்விக்கு பழி தீர்க்க முயற்சிக்கிறார்கள். 8 வழிச்சாலை திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு அப்பீல் செய்துள்ளது. இந்த  வழக்கை உச்சநீதிமன்றத்தில் நாங்கள் சந்திப்போம். மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கிறோம்’’ என்றனர்.


Tags : Citizens ,protest ,Salem ,state governments ,Central , 8 Pavilion, Appeal, Central, State Government, Farmers Struggle
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு