×

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம்: 3ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. திமுக மட்டும் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் 3வது மிகப்பெரிய  கட்சி என்ற அந்தஸ்தையும் திமுக பெற்றுள்ளது.இதுபோல, 22 சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 101 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் விரைவில் மக்களவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் மக்களவையில் 3வது பெரிய கட்சியாக உள்ள திமுகவின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும். மக்களவையில் எந்தெந்த மக்கள் நலன் சார்ந்த  பிரச்னைகளை எழுப்ப வேண்டும். மக்களவையில் எவ்வாறு உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் விவாதிக்கப்பட உள்ளது.

அதேநேரத்தில், மிக விரைவில் தமிழக சட்டப்பேரவையும் கூட உள்ளது. இதில் திமுக எம்எல்ஏக்கள் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும். கூட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த எந்தெந்த பிரச்னைகளை எழுப்ப வேண்டும்.  மைனாரிட்டியாக உள்ள அதிமுக அரசை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்தும் விவாதிப்பதற்காகவும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிப்பதற்காககவும் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கூட்டம் வருகிற 3ம் தேதி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.   

இதுதொடர்பாக திமுக பொது செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள்-சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 3ம் தேதி (நாளை  மறுநாள்) காலை 10 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். இதில் மாவட்ட செயலாளர்கள்-சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி  கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


Tags : DMK ,District Secretaries ,Meeting ,MB , DMK District Secretaries, MP, MLA, MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...