ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி மத்திய அரசுக்கு கடிதம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் உடனடியாக நீட் தேர்வை கட்டாயமாக்க முடியாது என கூறி, தமிழக அரசு நீட்  தேர்வில் இருந்து விலக்கு கோரியது. உச்ச நீதிமன்றம் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளித்தது. அதைத்தொடர்ந்து 2017ம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளாக நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு  வருகின்றன.

கடந்த ஆண்டு ஆயுஷ் (சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, ஓமியோபதி) மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் மாநில சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியது.  ஆயுஷ் மருத்துவப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நிரப்ப வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இதனால் கடந்த ஆண்டு  ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமா, இல்லையா என்ற குழப்பம் நீடித்தது. அதன்பின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக தலா 100 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் மொத்த எம்பிபிஎஸ் இடங்கள்  3,350 ஆக உயர்ந்துள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் கோட்டாவுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை நடத்துமாறு மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அதுதொடர்பாக தமிழக முதல்வருடன் கலந்துபேசி ஏற்கனவே உள்ள  இடஒதுக்கீடு பாதிக்காத வகையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் இருப்பிட சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால், சென்னையில் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்த உள்ளோம். கடந்த ஆண்டே நீட் மதிப்பெண் அடிப்படையில் ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது அதற்கான சட்ட முன்வடிவு அமலுக்கு வரவில்லை. அதனால் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில்  ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தினோம். இந்த ஆண்டு சட்ட முன்வடிவு அமலுக்கு வந்து, விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. விலக்கு பெற வாய்ப்புள்ளதா என தமிழக அரசின் தலைமை அட்வகேட் ஜெனரலிடம் கருத்து கேட்டுள்ளோம்.  மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளித்ததும் அதுதொடர்பாக தெரிவிக்கிறோம். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

× RELATED மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா அரசின்...