×

மத்திய நிதித்துறை அமைச்சராக முறைப்படி பொறுப்பேற்றார் நிர்மலா சீதாராமன்: பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் பதவியேற்பு

டெல்லி : மத்திய நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றுக்கொண்டார். அதேபோல, பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், சுப்ரமணியம் ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான் ஆகியோரும் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். நாட்டில் நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில், பாஜ மட்டும் 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றது. இதன் மூலம், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து நேற்று டெல்லி ராஷ்டிரபதிபவனில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.

அவருடன், பல்வேறு எம்.பி.க்கள் அமைச்சரவையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து, மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்களை இன்று ஒதுக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். அதன்படி, பிரதமர் மோடியின் கீழ் அரசு ஊழியர் நலன், மற்றும் அணுசக்தி துறை இருக்கும் என்றும் உள்துறை அமைச்சராக அமித் ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் பொறுப்புகளை பாஜக கட்சி வேட்பாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி, மத்திய நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து, மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக முக்தர் அப்பாஸ் நக்வி பொறுப்பேற்றார். மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக பியூஷ் கோயலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக சுப்ரமணியம் ஜெய்சங்கர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ரமேஷ் பொக்ரியால், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலாகா பதவி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அதேபோல மத்திய வனம், சுற்றுசூழல், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரகாஷ் ஜவடேகர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags : Nirmala Sitaraaman ,Piyush Goyal ,Prakash Javadekar ,Finance Minister ,Central , Nirmala Sitaraman, Prakash Jawadekar, Piyush Goyal, sworn
× RELATED பாஜக தேர்தல் அறிக்கைக் குழு...