×

திண்டுக்கல் ஜிஹெச் அவசர சிகிச்சைக்கு செல்லும் சாலையில் தினமும் அவஸ்தை

* போக்குவரத்து நெரிசலால் விழிபிதுங்கும் நோயாளிகள் மீண்டும் பழைய பாணி நடைமுறைக்கு வருமா?

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசலால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் நகரில் பெரும்பாலான ரோடுகள் குறுகலாக உள்ளன. இதில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் தெற்கு பகுதியில் உள்ள சத்திரம் சாலையும் ஒன்றாகும். இந்த சாலை வழியாக பழநி, கோவை, திருப்பூர் செல்லும் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்கின்றன. மேலும் இச்சாலை வழியாகத்தான் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டும். விபத்து, பிரசவம், தற்கொலை முயற்சி என தினமும் ஆம்புலன்ஸ்சில் சிகிச்சைக்கு வருபவர்கள் அதிகரித்துள்ளனர். இதற்காக வாகனங்கள் அண்ணா சிலை பகுதயில் இருந்து இடது பக்கமாக திருப்பி விடப்பட்டுள்ளது.

எனினும் சத்திரம் தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் விரைந்து அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல முடியவில்லை. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் ஒரு கர்ப்பிணி பெண்ணை அழைத்து வரும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனத்திலே பிரசவம் ஏற்பட்டது. சில நேரங்களில் நெரிசலால் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு முன்பாக சத்திரம் சாலையில் பஸ்கள், சரக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது சமூகஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு பழநி, கோவை, திருப்பூர் செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் பெரியார் சிலை வழியாக சத்திரம் சாலைக்கு சென்றன. இதனால் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு முன்பு போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. எனவே மீண்டும் அதே பாதையில் பஸ்கள், கனரக வாகனங்களை திருப்பிட விட வேண்டும்’ என்றனர்.

Tags : road , dindigul ,Government Hospital,ICU, Traffic
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...