நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி : காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைக்க முயற்சி

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலியாக காங்கிரஸ் கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைக்க முயற்சி நடப்பதாக டெல்லி அரசியலில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமாவை பெற மறுத்து 5 நாட்களாக அரசியல் தலைவர்களை சந்திக்காத ராகுல்காந்தி டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.

நடப்பு அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக தேசியவாத காங்கிரசை இணைப்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அது சாத்தியமானால் மக்களவையில் காங்கிரசின் பலம் 57-ஆக உயரும் என்பதால் எதிர்கட்சி தலைவர் பதவி கிடைப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் பதவிக்காக குறுக்கு வழி தேடுவதாக பாரதிய ஜனதா விமர்சித்துள்ளது.

1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு சோனியாகாந்தி தலைமை பொறுப்பை ஏற்றதற்கு அக்கட்சியில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரசை தொடங்கிய சரத்பவார் 20 ஆண்டுகளாகியும் மத்தியிலும், மகாராஷ்டிர அரசியலிலும் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கொள்கை முரண்பாடு இல்லாத காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைப்பு சாத்தியமே என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


× RELATED கடும் வெப்ப தாக்குதல் எதிரொலி கோழிக்கறி கிலோ விலை 200ஐ தொட்டது