ஹெல்த் கிளினிக், நாப்கின் இயந்திரம் வசதியுடன் திருச்சியில் ரூ.40 லட்சத்தில் நவீன பெண்கள் கழிப்பறை

* கட்டும் பணி மும்முரம்

திருச்சி : திருச்சி மாநகராட்சி சார்பில் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஹெல்த் கிளினிக், நாப்கின் இயந்திரம் வசதியுடன் பெண்களுக்கான பிரத்யேக கழிப்பறை கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.  திருச்சி மாநகராட்சி சார்பில் பெண்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய முன்மாதிரி கழிப்பறை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம்   சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே இடத்தை தேர்வு செய்து ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கி பணிகளை துவக்கியுள்ளது.

இந்த கழிப்பறையில் 6 மேற்கத்திய வடிவ கழிப்பறைகள், குழந்தைகளுக்கான பிரத்யேக கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தண்ணீர் வசதி கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  மேலும் சென்சார் மூலம் இயங்கும் வகையில் தானியங்கி கதவுகள், மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆட்கள் வரும்போது மட்டும் கதவு தானாக திறந்து மூடும், மின் விளக்குகளும் தானாக எரிந்து அணையும் வகையில் அமைக்கப்படுகிறது.

 மேலும் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கிருமிநாசினி மருந்துகள் கொண்ட கைகளை கழுவுவதற்கான சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கைகளை கழுவிய பிறகு கைகளை துடைக்க தானியங்கி டிரையர் இயந்திரமும் அமைக்கப்பட உள்ளது. மேலும் கட்டணம் செலுத்தி நாப்கின் பெற்றுக்கொள்ளும் இயந்திரமும் நிறுவப்படுகிறது. அதே போல் நாப்கின்களை சுகாதார முறையில் சாம்பலாக மாற்றும் இன்சிலேட்டர் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது.

இதுதவிர  இந்த வளாகத்திலேயே மகளிருக்கான ஹெல்த் கிளினிக் ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் மருத்துவ ஆலோசனைகள், மாதவிடாய் சுகாதார மேலாண்மை, பரிசோதனைகள் ஒரே இடத்தில் கிடைக்கும். அதே போல் பணம் எடுக்க வசதியாக ஏடிஎம் மையமும் அமைக்கப்படுகிறது. இதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதால் வரும் ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Related Stories: