×

பதவிப்பிரமாணத்தில் பங்கேற்க சைக்கிளில் புறப்பட்டு சென்ற நாட்டின் எளிய வேட்பாளர்: மத்திய இணையமைச்சராக பதவியேற்பு!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்கொண்ட விழாவில் எளிய மனிதர் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் கோபிநாத்பூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் தான் ஒடிசாவின் மோடி என்று அறியப்படும் பிரதாப் சந்திர சாரங்கி. இளம் வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஈடுபாடு கொண்டு இயங்கிய சாரங்கி, சுற்றுவட்டார பகுதி மக்களிடம் பரிச்சயமானவர் ஆவார். பட்டப்படிப்பை முடித்தபோதும் அவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். மிகவும் எளிய தோற்றத்தை கொண்டிருக்கும் அவர், கிராமங்கள்தோறும் சைக்கிளிலேயே வளம் வருகிறார். இந்த அறிமுகத்தில் அரசியல் களமும் சாரங்கியை வரவேற்க, நிலகிரி என்ற சட்டப்பேரவை தொகுதியில் 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.

அந்த காலக்கட்டங்களில் பழங்குடியின கிராமங்களில் கண சிக்‌ஷா மந்திர் யோஜனா என்ற திட்டத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்களை துவக்கி வைத்துள்ளார். எளிதில் அணுகுவிடக்கூடியவர் என்று கூறும் ஒடிசா மக்கள், சாரங்கியை ஒடிசாவின் மோடி என்று அழைக்கின்றனர். 64 வயதாகியும் திருமணம் முடித்துக்கொள்ளாமல் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். 2014ம் ஆண்டு நிலகிரி சட்டப்பேரவை தொகுதியை உள்ளடக்கிய பாலாசோர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் களம் கண்ட அவர் தோல்வியை தழுவினார். இந்த முறையும் அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக சாரங்கி போட்டியிட்டார். பிஜு ஜனதா தளத்தின் வேட்பாளராக பெரும் கோடீஸ்வரர் ரபீந்திர குமார் ஜெனா, காங்கிரஸ் வேட்பாளராக நவஜோதி பட்நாயக் என பண பலமும், அரசியல் செல்வாக்கும் மிக்க வேட்பாளர்கள் எதிர் திசையில் களமிறங்கினர். ஆனால், சாரங்கி தனது பாணியில் சைக்கிளிலேயே கிராமம் கிராமமாக சென்று பரப்புரை செய்தார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அப்போது அதிகளவில் பகிரப்பட்டன.

சாரங்கிக்காக பிரதமர் மோடியே பாலாசோர் தொகுதியில் பரப்புரை செய்தார். இந்த முறை சாரங்கியை வாக்காளர்கள் கைவிடவில்லை. கடந்த முறை தம்மை தோற்கடித்த ரபீந்திர குமார் ஜெனாவை விட 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் சாரங்கி வெற்றி பெற்றார். முதல் முறையாக எம்.பி.யாகியுள்ள பிரதாப் சந்திர சாரங்கி பதவியேற்பதற்காக தனது குடிசை வீட்டிலிருந்து சைக்கிளிலேயே புறப்பட்டார். 2வது முயற்சியில் எம்.பி. ஆகியிருந்தாலும் எம்.பி.யான முதன்முறையிலேயே மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகியுள்ளார். மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற போது எளிய தோற்றத்தின் அடையாளமான சாரங்கியும் இணை அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சாரங்கி சைக்கிளில் சென்று பரப்புரை செய்த படங்கள், பதவியேற்க சைக்கிளில் புறப்பட்ட புகைப்படங்களை போல அவர் பதவியேற்றுக்கொண்ட காணொலி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Tags : candidate ,country ,Central Commander , poor candidate, Pratap Chandra Sarangi, BJP,Deputy Minister
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!