×

சென்னை புறப்பட்ட முதல்வர், அமைச்சர்கள்; டெல்லியிலே முகாமிட்டுள்ள ஓ.பி.எஸ். மற்றும் தேனி எம்.பி. ரவீந்திரநாத்

புதுடெல்லி: பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் சென்னை புறப்பட்டனர். ஆனால் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் டெல்லியில் இருந்து புறப்படவில்லை. நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில், பாஜ மட்டும் 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றது.

இதன் மூலம், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியை தக்க வைத்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 2வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து 24 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 9 இணை அமைச்சர்களும், 24 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அமைச்சரவையில் தமிழகத்துக்கு  வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், பாஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக.வுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழகத்தில் அதிமுக தரப்பில் வெற்றி பெற்ற ஒரே எம்பி.யான தேனி வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு இப்பதவி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றார் போல், ரவீந்திரநாத்தும் நேற்று டெல்லி சென்றிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சென்னை புறப்பட்டனர். ஆனால் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது மகனான தேனி எம்பி ரவீந்திரநாத்துடன் டெல்லியிலேயே உள்ளார்.

Tags : ministers ,Chief Minister ,Rabindranath ,campus ,Chennai Ops ,Theni ,Delhi , AIADMK, Union Cabinet, BJP, Chief Minister Edappadi, O.Paniriselvam, Ravindranath Kumar
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...