×

பார் உரிமையாளர் தற்கொலை விவகாரம் காஞ்சிபுரம் எஸ்.பி., 4 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: பார் உரிமையாளர் தற்கொலை வழக்கு விவகாரத்தில் காஞ்சிபுரம் எஸ்.பி., 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அடுத்த ஆழ்வார் குறிச்சியை சேர்ந்தவர் நெல்லையப்பன் (35). இவர், திருப்போரூரில் குடும்பத்துடன் தங்கி அதிமுக பிரமுகர் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான மதுபானக் கடை பார்களை எடுத்து நடத்தி வந்தார். இதில் ஆனந்தன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜு ஆகியோர் அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து நெல்லையப்பன் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் கொடுக்க சென்றபோது புகாரை வாங்க போலீசார் மறுத்து அவரை திட்டி அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த நெல்லையப்பன், ‘உங்களுக்கு பணம் தானே குறிக்கோள், இந்தாங்க 50 ஆயிரம் ரூபாய். இதை வைத்துக் கொண்டு ஆனந்தன் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று ஆத்திரத்துடன் கூறி அந்த பணத்தை டேபிள் மீது வைத்து விட்டு கீழே வந்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனிடையே, தீயில் உடல் கருகி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நெல்லையப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீக்குளித்த நெல்லையப்பன் செங்கல்பட்டு மருத்துவமனையில் மாவட்ட நீதிபதி காயத்ரிதேவி முன்பு வாக்குமூலம் அளித்தார். இந்த செய்தி பத்திரிகையில் வெளிவந்தது. இச்சம்பவம் திருப்போரூர், மாமல்லபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுதொடர்பான செய்தி கடந்த 29ம் தேதி தினகரன் நாளிதழில் வெளிவந்தது. இந்த செய்தியை படித்து பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் எஸ்.பி., 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

காத்திருப்போர் பட்டியலில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்:
திருப்போரூரில் பார் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாமல்லபுரம் டிஎஸ்பி மற்றும் கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். திருப்போரூரில் அதிமுக பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான டாஸ்மாக் பார்களை நெல்லையப்பன் எடுத்து நடத்தி வந்தார். இதில், ஆனந்தன், மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜூ, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால், ஆத்திரமடைந்த நெல்லையப்பன் மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் கடந்த 28ம் தேதி காலை பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். அவரது உடல், ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில், தீக்குளித்த நெல்லையப்பன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, மாவட்ட நீதிபதி காயத்ரிதேவி முன்பு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருப்போரூர் அதிமுக ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனை காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். மேலும் மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜூ, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

Tags : Lokayukta ,Human Rights Commission ,Kanchipuram SB , Bar owner, suicide case, Kanchipuram SP, 4 week report, Human Rights Commission
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...