×

கோயில்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம்: கமிஷனர் பணீந்திரரெட்டி உத்தரவு

சென்னை: கோயில்களில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கமிஷனர் பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கோயில்களில் பணிபுரியும் முழு நேர/நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதும், நிதி வசதி குறைந்த இபிஎப் சந்தா செலுத்த இயலாத நிலையில் உள்ள கோயில் பணியாளர்கள், இபிஎப் சந்தா செலுத்துபவராக இருந்தும் இபிஎப் திட்டத்தில் சேர்ந்த பின் 58 வயது நிறைவில் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக பணிக்காலம் உள்ள பணியாளர்கள் ஆகியோர்களுக்கும் துறை நிலையிலான ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டு அத்திட்டத்தை செயல்படுத்திட ஆணையிடப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்களுக்கு துறைநிலையிலான ஓய்வூதியம் பெற கீழ்க்கண்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

* இபிஎப் திட்டத்தில் சேர்ந்து சந்தா செலுத்துபவராக இருந்தும், அத்திட்டத்தில் சேர்ந்த நாளில் இருந்து 58 வயது நிறைவில் 10 ஆண்டு கால பணிக்காலத்திற்கும் குறைவான பணிக்காலம் உள்ள பணியாளர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

* கோயில்களில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயது நிறைவடைந்த ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு அவர்களது வாழ்நாள் முழுவதும் மட்டும் ஓய்வூதியம் மாதம் ரூ.2 ஆயிரம் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

* ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களில் 14.12.2015க்கு பின் இறப்பவர்களுக்கு, அவர்களின் நேரடி வாரிசான கணவன்/மனைவிக்கு மட்டும் அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியதாரர் கடைசியாக பெற்ற மாத ஓய்வூதியத்தில் 50 சதவீதத்தை மாத குடும்ப ஓய்வூதியமாக வழங்கவும், மாதாந்திர ஓய்வூதிய தொகை உயர்வு செய்து அவ்வப்போது அரசால் ஆணை பிறப்பிக்கப்படும் நிலையில், அதற்கேற்றவாறு உயர்த்தி வழங்கப்படும் ஓய்வூதிய தொகையில் 50 சதவீதத்தை குடும்ப ஓய்வூதியாக மேற்காணும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

* 1996க்கு முன்னர் ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களுக்கும் துறை நிலையிலான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது. அதன்படி 1.1.2006 முதல் ரூ.750 ஓய்வூதியம், 1.1.1996 முதல் 31.12.2005 வரை ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களுக்கு ரூ.800, 1996க்கு முன் ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களுக்கு ரூ.800, 20.6.2013 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.1000, 14.5.2015 முதல் ஓய்வூதியம் பெற்ற கோயில் பணியாளர்களின் இறப்புக்கு பின் அவர்களின் நேரடி வாரிசான கணவன்/மனைவிக்கு மட்டும் அவர் தம் வாழ்நாள் முழுவதும் அவர்கள் கடைசியாக பெற்ற மாத ஓய்வூதியத்தில் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. 7.10.2016 முதல் மாத ஓய்வூதியம் ரூ.1000லிருந்து ரூ.2 ஆயிரம் ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.500 லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Commissioner ,nominee ,temples , Temple, 10 years, employee, Rs.2,000 per month, pension
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...