தொடங்கியது உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அபார பந்து வீச்சில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா

லண்டன்: உலக கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது. உலக கோப்பை தொடரின் முதல் போட்டி லண்டனில் உள்ள ஒவல் அரங்கில் நேற்று நடைப்பெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து தொடக்க ஆட்டக்கார்களாக இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். முதல் பந்தில் ஜாசன் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை சந்தித்த அதிரடி ஆட்டக்காரர் ஜானி அடித்து ஆட பந்து விக்கெட் கீப்பர் டீ காக்கின் கைகளில் தஞ்சம் புக ஜானி டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதன் பிறகு களமிறங்கிய ஜோ ரூட், ஜாசன் ராய் இருவரும் அடித்து விளையாட ஆரம்பித்தனர். அதனால் 17வது ஓவரில் அந்த அணி 100 ரன்களை எட்டியது. அடுத்த ஓவரில் இருவரும் அரை சதத்தை கடந்தனர். தொடர்ந்து 19வது ஓவரை வீசிய அண்டில் பெலுக்வாயோ, ஜாசனின் விக்கெட்டை கைபற்றினார். அப்போது ஜாசன் 53 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து 20 ஓவரின் முதல் பந்தில் 51 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை  காகிசோ ரபாடா கைப்பற்றினார். அப்போது அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள். அதற்கு பிறகு இங்கிலாந்து வீரர்கள் ரன் எடுக்கும் வேகத்தை தென் ஆப்ரிக்க வீரர்கள் கட்டுப்படுத்தினர்.

இங்கிலாந்து அணி 25 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு கேப்டன் இயான் மார்கன் அதிரடி காட்ட, பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் முதல் சிக்சரை  25.2 ஓவரில் தான் மார்கன் அடித்தார். அடுத்து ஸ்டோக்சும் வேகம் காட்ட ஸகோர் உயர ஆரம்பித்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் 5 பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல் ரவுண்டர் பந்து வீசியும் பலன் இல்லாததால், பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரமும் வந்து வீச வந்தார். ஆனால் பலன்தான் கிடைக்கவில்லை.

ஆனால் தாஹிர் மீண்டும் பந்து வீச வந்ததற்கு பலன் கிடைக்கது. அவரது பந்து வீச்சில் மார்கன் ஆட்டமிழந்தார். அவர் 60 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு வந்த ஜோஸ் பட்லர் உட்பட மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் வெளியேறினர். நீண்ட நேரம் தாக்குப்பிடித்த ஸ்டோக்ஸ் 49ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அவர் 79 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தார். ஆட்ட நேர முடிவில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. பிளங்கெட் 9 ரன்களுடனும், ஆர்ச்சர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜோ ரூட் - ஜாசன் ராய் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தனர். அதேபோல் மார்கன்- பென் ஸ்டோக்ஸ் இவரும் 4வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தனர். தெ.ஆப்ரிக்கா தரப்பில் என்ஜிடி 3 விக்கெட்களும், ரபாடா, தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், அண்டில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி 312 ரன் எடுக்க வேண்டிய நிலையில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியில் இறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் குயின் டீ காக் 74 பந்தில் 68 ரன்கள் குவித்த நிலையில் பிளங்கட் பந்தில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதற்கு அடுத்து வந்தவர்கள் பொறுப்பில்லாமல் ஆடி விக்கெட்டை தொடர்ந்து இழந்தனர்.இதில் தூசன் மட்டுமே 50 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் குறைந்த ரன்னில் அவுட் ஆகினர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் 3 விக்கெட் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். பென் ஸ்டோக்ஸ் 89 ரன் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அணி 311 ரன் குவிக்க உதவினார். ஆனால் 311 ரன்கள் குவிக்க முடியாமல் திணறிய தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தின் வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் 39.5 ஓவரில் 207 ரன் மட்டுமே எடுத்து 104 ரன்னில் படுதோல்வியை சந்தித்து குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

முதல் முதலாய்... 12வது உலக கோப்பை தொடரின்:
முதல் டக் அவுட் : ஜானி பேர்ஸ்டோ(இங்கிலாந்து)
முதல் விக்கெட் வேட்டை :  இம்ரான் தாகிர் (தெ.ஆப்ரிக்கா).
முதல் 4 : ஜோ ரூட் (இங்கிலாந்து)
முதல் 6 :  இயான் மார்கன் (இங்கிலாந்து)
முதல் அரைசதம் : ஜாசன் ராய்(இங்கிலாந்து)

× RELATED காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் சரத் கமல் அதிர்ச்சி