×

முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியல் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகை: செம்மஞ்சேரி, மேடவாக்கத்தில் பரபரப்பு

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், மேடவாக்கத்தில் குடிநீர் வழங்க கோரி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 200வது வார்டுக்குட்பட்ட செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. குறிப்பாக, கடந்த 3 நாட்களாக குடிநீர் முழுவதுமாக வழங்கப்படாததால், இப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் குடிநீர் தேடி அலைந்து வருகின்றனர்.

எனவே, தங்களது பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் குடிசை மாற்று வாரிய மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நேற்று செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு நுழைவாயிலில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் குடிநீர் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை. அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இல்லாததால் சிலர் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தங்கி உள்ளனர். உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இப்பகுதி மக்கள் அனைவரையும் திரட்டி ராஜீவ்காந்தி சாலையில் மறியலில் ஈடுபடுவோம்’’ என்றனர். வேளச்சேரி: புனித தோமையர் மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேடவாக்கம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் என மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் வாசிப்பவர்களுக்கு தெரு குழாய்கள் மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது கோடைகாலம் என்பதால், ஊராட்சியின் நீர் ஆதாரமாக விளங்கும் திறந்தவெளி மற்றும் ஆழ்துளை  கிணறுகள் வறண்டு தண்ணீர் குறைந்தது. இதனால், கடந்த ஒரு மாதத்திற்கு  மேலாக 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குழாயில் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதனால், மற்ற நாட்களில் இந்த பகுதி மக்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வசதியற்ற பலருக்கு இது  சாத்தியமில்லை என்பதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், நேற்று   மதியம் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள்  ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அங்கிருந்த அலுவலர்கள்  தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக  கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகூறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மேடவாக்கம் ஊராட்சியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த கோடை காலத்தில் 500 அடிக்கு கீழ் தண்ணீர் சென்று விட்டது. இதனால், குளிக்க, துணி துவைக்க, வீடுகள் கழுவ, கழிப்பறைக்கு பயன்படுத்த தண்ணீரின்றி தவிக்கிறோம். தற்போது, லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கூலித் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் மேடவாக்கம் ஊராட்சியை இணைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Siege ,picket house ,village ,Seemanjeri ,Medavakkam , Condemnation, condemnation, evacuation, grazing, road stroke, Semmanjeri, Medavakkam
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...