×

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்வரத்து கால்வாய்கள்: மழைக்காலத்தில் மக்கள் அவதி

ஆவடி: ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில், நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. இதனால் மழைக்காலத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர். இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றனர். ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 1992ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு 1 முதல் 6 பிளாக்குகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்
கின்றனர். ஆவடி நகராட்சியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மட்டும் 25 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட பெரிய வார்டாக உள்ளது. இந்த குடியிருப்பை ஒட்டி பருத்திப்பட்டு ஏரி உள்ளது. இந்த ஏரிக்கான  நீர்வரத்து மற்றும் உபரி நீர் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளது.

இதனால் மழைக்காலத்தில் குடியிருப்புவாசிகள் வெள்ளத்தால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிகளுக்கு செல்லும் நீர்வரத்து மற்றும் உபரி நீர் கால்வாய்களிலுள்ள  ஆக்கிரமிப்பை போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பருத்திப்பட்டு ஏரி நிறைந்து வரும் உபரிநீர் கால்வாய், ஆவடி ராணுவ பகுதியில் இருந்து வரும் நீர்வரத்து கால்வாய் ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் விளிஞ்சியம்பாக்கம் ஏரி உபரிநீர் கால்வாய் காமராஜர் நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சலவையாளர் குடியிருப்பு பகுதிகளில் 40 அடி கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு 5 முதல் 10 அடியாக உள்ளது. அதுபோல, ஆவடி ராணுவ பகுதியிலிருந்து வரும் நீர்வரத்து கால்வாய், புதிய ராணுவ சாலை பகுதியில் இருந்து கன்னிகாபுரம் வரை ஆக்கிரமிக்கப்பட்டு 6 முதல் 10 அடியாக உள்ளது.

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் கால்வாயில் மழைநீர் செல்ல முடியாமல் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் புகுந்து விடுகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 2015-2017ம் ஆண்டு வரை மழையால் குடியிருப்புகள் முழுவதும் தண்ணீரில் மிதந்தது. இதனால் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் படகு மூலம் வீட்டை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று வெளியேறினர். பின்னர் ஒரு வாரத்துக்கு பிறகு தான் மழை நின்று தண்ணீர் குறைந்தது. அதன்பிறகு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

இந்த வருடம் மழை குறைவாக இருந்ததால் பாதிப்பு தெரியவில்லை. இவ்வாறு பருவ மழையின் போது ஏரி நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். இதையடுத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி பராமரிக்க வேண்டும் என வீட்டுவசதி குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அனுப்பினர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். தற்போது உயர்நீதிமன்றம் நீர்நிலைகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புக்களை அகற்ற உத்தரவிட்டு உள்ளது. இனியாவது அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Occupied Territories ,season , Avadi surrounding area, occupation, water canals, rains, people suffering
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...