×

பவானியை தொடர்ந்து காவிரியும் வறண்டு போனது ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாடு : 10 நாளுக்கு ஒருமுறை விநியோகம்

ஈரோடு:  மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீருக்காக 1000 கனஅடி தண்ணீர் திறந்தும் இந்த நீர் ஈரோடுக்கு வராததால் காவிரி ஆறு வறண்டுள்ளது. இதனால், ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டு–்ப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வரும் காவிரி ஆறு, ஈரோடு மாவட்டம் வழியாக நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக செல்கிறது. ஈரோடு மாநகர பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக காவிரி ஆற்றில் இருந்து வைராபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி, சூரியம்பாளையம், கொத்துக்காரன்புதூர், வெண்டிபாளையம் உள்ளிட்ட 9 குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 54 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்து வழங்கப்படுகிறது. தற்போது, மேட்டூர் அணையில் 15.86 டி.எம்.சி. தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து 71 கனஅடியாக உள்ளது. ஆனால், ஆயிரம் கனஅடி நீர் குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு வறண்டுள்ளதால் ஈரோட்டிற்கு தண்ணீர் வருவதில்லை. இதனால், கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

வழக்கமாக, மாநகராட்சி பகுதியில் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில வார்டுகளில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது, காவிரி ஆறு வறண்டிருப்பதால் மாநகராட்சி பகுதியில் போதிய குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரை ஆங்காங்கே உள்ள தொழிற்சாலைகள் திருடுவதால் போதிய தண்ணீர் ஈரோடுக்கு வருவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் நெரிஞ்சிபேட்டை, அம்மாபேட்டை, பூலாம்பட்டி, கோனேரிபட்டி பகுதிகளில் தண்ணீர் திருட்டு நடப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags : Bhavani , Draining of Water , Erode,Delivery every 10 days
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்