×

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து கலெக்டர் முன் கோஷம் : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர். டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை எதிர்த்தும், திட்டத்தை கைவிடக்கோரியும் விவசாயிகள், பொது மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் வரும் ஜூன் 12ம் தேதி இத்திட்டத்தை எதிர்த்து, மரக்காணத்தில் துவங்கி ராமேஸ்வரம் வரை கடற்கரையோரம் 600 கிமீ நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இதுதவிர பல்வேறு விவசாய மற்றும் பொது நல அமைப்புகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் நாகை அருகே காமேஸ்வரம் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலோர பிரதேசக்குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். பின்னர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களின் சின்னங்களையும் தீ ைவத்து எரித்தனர். திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆனந்த் தலைமை வகித்தார். கூட்டம் துவங்கியதும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் சார்புடைய விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் நல சங்க தலைவர் சேதுராமன் மற்றும் அனைத்து விவசாயிகளும் திடீரென எழுந்து நின்று கலெக்டர் முன் கோஷங்களை எழுப்பினர். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தக்கூடாது, அந்த திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று கோஷங்களை முழங்கினர்.
சிறிது நேர போராட்டத்துக்கு பின் மீண்டும் கூட்டம் துவங்கியது. அப்போது, தங்களது கருத்துக்களை விவசாயிகள் தெரிவித்து பேசினர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

Tags : Collector ,office ,Tiruvarur Collector , Collector's anti-Hydrocarbon project , Tiruvarur Collector's office
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...