×

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு அமலாக்கத் துறையில் ராபர்ட் வதேரா ஆஜர் : பிரியங்கா அழைத்து வந்து விட்டார்

புதுடெல்லி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஆஜரானார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா, லண்டனில் ரூ.18 கோடியில் சொத்துகளை வாங்கினார். இதில், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக வதேரா, அவருடைய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. வதேராவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரியும், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரியும் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத் தாக்கல் செய்துள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், ராபர்ட் வதேரா பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு ராபர்ட் வதேரா நேற்று வந்தார். மனைவி பிரியங்கா அவரை காரில் அழைத்து வந்து விட்டு சென்றார். அதிகாரிகள் முன்னிலையில் காலை 10.30 மணிக்கு வதேரா ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவரது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

‘விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பேன்’

விசாரணைக்கு புறப்படும் முன்பாக, தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் வதேரா வெளியிட்டுள்ள பதிவில், ‘நான் இந்திய நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். இதுவரை 11 முறை விசாரணை அமைப்பு முன் ஆஜராகி இருக்கிறேன். இதுவரை 70 மணி நேரம் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் நான் விசாரணைக்கு ஒத்துழைப்பேன். பொய்யான குற்றச்சாட்டில் இருந்து எனது பெயர் அகற்றப்படும் வரை எனது ஒத்துழைப்பு தொடரும்’ என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Robert Vadra ,Priyanka , Robert Vadra , illegal anti-money ,laundering case
× RELATED அரியானாவில் காங்கிரஸ் அலை: பிரியங்கா பேச்சு