ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு

புதுடெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தியை சிபிஐ, அமலாக்கத் துறை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 1ம் தேதி வரை டெல்லி நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்கள் நேரடி அன்னிய முதலீட்டை முறைகேடாக பெறுவதற்கு அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி வழங்கியதாகவும், இதற்கு அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உதவி செய்து லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது பற்றி சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் இருவரும் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.

டெல்லி நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்க சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை ஆராய்வதற்காக அமலாக்கத் துறை சிறப்பு இயக்குனர் சிங்கப்பூர் சென்றுள்ளதால், இந்த வழக்கில் வாதிடுவதற்கு 3 வாரம் அவகாசம் வழங்கும்படி அமலாக்கப் பிரிவு கேட்டது. இதைத் தொடர்ந்து, கைது நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிக்கும்படி ப.சிதம்பரம், கார்த்தி தரப்பு வக்கீல்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, இடைக்கால பாதுகாப்பை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்தார். 


Tags : P. Chidambaram ,Karthi ,arrest , Aircel Maxims case, P. Chidambaram, Karthi,banned for arrest
× RELATED வழக்கு தொடர்பாக ஒரு குற்றச்சாட்டு கூட...