×

காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர்-பொதுமக்கள் இடையே கடும் மோதல்: 60 பேர் காயம், ஒருவர் பலி

குல்காம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர்-பொதுமக்கள் இடையே நடைபெற்ற கடும் மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். குல்காமின் தாஸிபோரா கிராமத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான சண்டை நேற்று அதிகாலை தொடங்கியுள்ளது. இதில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீடு குண்டுவீசித் தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இதிலிருந்து உடல்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த நிலையில், அப்பகுதி இளைஞர் ஒருவர், தீவிரவாதிகளை காப்பாற்றுவதற்காக பாதுகாப்பு படையினரின் தடுப்பு வளையத்தை தகர்க்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக, இந்தச் சண்டையை வீதிகளில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் திடீரென பாதுகாப்புப் படையினருடன் சண்டையிட ஆரம்பித்துள்ளனர்.

இதைத் தடுக்க பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால், இந்த மோதலில் சோபியனின் பத்ரஹாமா பகுதியைச் சேர்ந்த சஜாத் அகமது என்னும் நபர் உயிரிழந்தார். சுமார் 60பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மொகமதுபுரா பொது சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலத்த காயமடைந்த 7 பேர் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பாதுகாப்பு படை-பொதுமக்கள் இடையேயான மோதல் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று குல்காம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிந்தர் பால் கூறியுள்ளார்.


Tags : Security forces ,area ,clash ,Kashmir ,Kulkam ,civilians , Civilians,clash,Kulgam,Shopian,encounter,Kashmir
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு