×

கடந்த 5 ஆண்டுகளாக குடந்தை அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் காட்சி பொருளான நீர்த்தேக்க தொட்டி

கும்பகோணம்: கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் 5 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சி பொருளாக உள்ளது. எனவே மின்மோட்டாரை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அடுத்த அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். அதன்பேரில் 2013- 2014ம் ஆண்டு ரூ.16 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

ஆனால் அப்போது கட்டிட பணிகள் முடிந்து குழாய்கள் மற்றும் மோட்டார் பொருத்தி தண்ணீர் விட்டனர். அதில் குழாய்கள் உடைந்ததுடன் மின்மோட்டாரும் பழுதானது. எனவே மின்மோட்டாரை சரி செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய குழாய் மற்றும் மோட்டார் பொருத்தியது. அதில் தண்ணீர் விட்டபோது மீண்டும் மின்மோட்டார் வெடித்ததில் குழாய்கள் சிதறியது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக 2 ஆழ்குழாய் போர் அமைத்து அண்ணலக்கரஹாரம் ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக தண்ணீர் வழங்கி வருகின்றனர். இதுபோல் நேரடியாக குழாயில் தண்ணீர் விடும்போது குழாயில் கழிவுநீர் கலந்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டி எந்தவிதமான பயன்பாடும் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது.

எனவே அண்ணலக்ரஹாரம் ஊராட்சிக்கு வழங்கும் தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் ஏற்றி அனைத்து பகுதிகளுக்கு வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ராமன் கூறுகையில், அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்காக அமைத்துள்ள மின்மோட்டார் மற்றும் குழாய், தண்ணீர் வரத்தின் பிரஷரால் இரண்டு முறை வெடித்தது. இதையடுத்து அப்படியே விட்டு விட்டு 2 மோட்டார்களை அமைத்து நேரடியாக தண்ணீர் வழங்கி வருகின்றனர். இப்படி நேரடியாக தண்ணீர் வழங்குவதால் குழாயில் கழிவுநீர் கலந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி அதில் போரிங் பவுடர் தெளித்து வழங்குவதால் ஏதேனும் கிருமிகள் இருந்தால் அழிந்துவிட வாய்ப்புள்ளது. எனவே ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் மின்மோட்டார்கள், குழாய்களை தரமானதாக அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என்றார்.

Tags : village ,Analakaraharam , Kumbakonam, reservoir tank
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...