×

ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்தது டெல்லி சிறப்பு நீதிமன்றம்!

புதுடெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஆனால், வழக்கில் சரியான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்த நிலையில், முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த டெல்லி சிபிஐ நீதிமன்ற தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி, இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையின் தன்மைக்கு ஏற்ப, இந்த தடை உத்தரவு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருவரையும் கைது செய்வதற்கான தடை இன்றுடன் முடிவடைந்த நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Delhi Special Court ,Karthik Chidambaram ,Chidambaram , P. Chidambaram, Karthik Chidambaram, arrested, interim bans, Aircel Maxis
× RELATED போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர்...