×

நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா: சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நீக்கப்படவில்லை

அமெரிக்கா: பிரதான வர்த்தக கூட்டாளிகளின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து டிரம்ப் நிர்வாகம் இந்தியாவை அகற்றியது. வர்த்தக முன்னேற்றத்திற்காக மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, டாலருக்கு நிகரான கரன்சி மதிப்பை முறைகேடு செய்து மாற்றுவதாக சந்தேகிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. அந்நியச் செலாவணி தொடர்பான அரையாண்டு அறிக்கையை ஒன்றை அமெரிக்க நிதித்துறை அண்மையில் தாக்கல் செய்தது. 40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த 2018-ம் ஆண்டு அக்டொபர் மாதத்திற்கு பிறகு, இந்தியா-அமெரிக்கா இடையேயான அந்நியச் செலாவணியில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே, டாலருக்கு நிகரான கரன்சி மதிப்பை முறைகேடு செய்து மாற்றுவதாக, சந்தேகிக்கப்படும் பட்டியலில் இருந்து இந்திய கரன்சி நீக்கப்படுகிறது.

இதேபோல், ஸ்விட்சர்லாந்து கரன்சியும் நீக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், சீனா, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகள் இன்னும் அந்தப் பட்டியலில் உள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கரன்சி கண்காணிப்பு பட்டியலில் முதல் முறையாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் இந்தியாவை அமெரிக்கா சேர்த்தது. அந்தப் பட்டியலில், இந்தியா மட்டுமன்றி சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளையும் அமெரிக்கா சேர்த்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 2018 அக்டோபரில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த அறிக்கை வெளியிடும்போது இந்தியாவின் பெயர் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Tags : India ,USA ,Currency Monitoring List ,China ,Japan , Currency Monitoring List, India, Removal, USA
× RELATED இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு: அமெரிக்கா பரபரப்பு அறிக்கை