×

பாபநாசம் அணையில் வரலாறு காணாத வறட்சி... ஜூன் 1ல் தென்மேற்கு பருவமழை தொடங்குமா?

நெல்லை: நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையின் பாபநாசம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. பாபநாசம் அணையின் கீழ் நெல்லை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் ஆகிய 7 கால்வாய்கள் மூலமும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகிய 4 கால்வாய்கள் மூலமும் பாசனம் நடக்கிறது.

நெல்லை, தூத்துக்குடியில் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழையின் மூலம் கார் பருவ நெல் சாகுபடியும், அக்டோபர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழையின் மூலம் பிசான பருவ நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாபநாசம் அணையில் நீர் நிரம்பி இருந்தால் நெல்லை, தூத்துக்குடியில் கார் பருவ நெல் சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாபநாசம் அணையில் தண்ணீர் இல்லாததால் நீர் திறப்பு தாமதமாகி வருகிறது.

நேற்றைய நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 9.45 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 62.61 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 275 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக மட்டும் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையில் நிலவும் வரலாறு காணாத வறட்சியால் திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து பொதுப்பணித்துறை தாமிரபரணி கோட்ட அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 22ம் தேதி கார் பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு விரைவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கிறோம். பருவமழை துவங்கி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர வேண்டும். அப்போது தான் கார் பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க முடியும் என்றனர்.

Tags : Papanasam Dam ,Southwest Monsoon , Papanasam Dam, Drought
× RELATED ‘குளு குளு அறிவிப்பு’.. கொளுத்தும்...