×

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வறட்சி... வற்றாத நதியான பவானி வறண்டது

மேட்டுப்பாளையம்: கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி தாண்டமாடுவதால் வற்றாத ஜீவநதியான பவானி ஆறு வறண்டது. இதனால், 10 மலை கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் புதிய குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவை, திருப்பூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் பவானி ஆறு உருவாகி கேரள மாநிலம் அட்டபாடி வனங்களின் வழியே 25 கி.மீ. தூரம் பயணித்து மீண்டும் தமிழகத்தின் கோவை மாவட்ட மலை கிராமமான கூடபட்டி அத்திகடவு ஆற்றின் வழியாக வந்து மேட்டுப்பாளையம் பில்லூர் அணையை அடைகிறது.

பவானி ஆற்றின் கிளை ஆறு சிறுவாணி வெள்ளியங்கிரி மலைக்காடுகளில் உற்பத்தியாகிறது. இதனால், இந்த இரண்டு ஆறுகளில் கோடை காலத்தில்கூட தண்ணீர் வற்றாமல் ஓடும். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சியின் தாக்கம் இந்தாண்டு அதிகமானதால் பவானி, சிறுவாணி ஆறுகளில் நீர்வரத்து இல்லாமல் அத்திக்கடவு ஆறு வறண்டு போனது. இதனால், 10 மலைக்கிராமங்களில் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளும் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன.வனஉயிரினங்களுக்கும் இந்த ஆறுதான் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடி வரும் இந்த பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கோவை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பில்லூர் அணையின் இரண்டு மிகப்பெரிய கூட்டு குடிநீர் திட்டங்களும், அணையின் கீழ்பகுதியான மேட்டுப்பாளையத்தில் 10க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதமாக நிலவி வரும் கடும் வறட்சியால் பவானி ஆறு தனது தனித்தன்மையை இழந்து தண்ணீர் வற்றிப்போய் காட்சி அளிக்கிறது.

அத்திக்கடவு பகுதிக்கு வரும் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் வெறும் கூழாங்கற்களாக மட்டுமே காட்சி அளிக்கின்றன. இதனால், அணைக்கு வரும் தண்ணீர் வரத்து தொடர்ந்து சரிவை எட்டி வருகிறது. ஆற்றில் ஓரிரு இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதால் ஆற்றின் ஓரங்களில் குழி தோண்டி நீருற்று ஏற்படுத்தி அதன்மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றனர். பவானி ஆற்றில் இதே நிலை தொடர்ந்தால் தற்போது செயல்படுத்தபட்டுள்ள குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு அரசு அறிவித்துள்ள புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடியாத அளவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய குடிநீர் திட்டங்களை நம்பி உள்ள பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. எதிர் வரும் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தால் மட்டுமே நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும். இல்லையெனில், கோவை மற்றும் திருப்பூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும்.

Tags : drought ,river ,Bhavani , Mettupalayam, Bhavani, Drought
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...