×

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வருண லிங்க சன்னதியில் மழை வேண்டி சிறப்பு யாகம்

திருவண்ணாமலை: தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை கைவிட்டதால், கடும் வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. நீர்நிலைகள் வற்றிவிட்டன. நீர்நிலைகளில் தண்ணீரில்லாததால் விவசாய சாகுபடியும் பொய்த்துவிட்டன. இதுவரை எப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில், மழை வேண்டி கடந்த வாரம் சிறப்பு யாகம், வருண ஜெபம் நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் மழை வேண்டி யாகம் நடந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அஷ்ட லிங்க சன்னதிகளில் ஒன்றாக அமைந்துள்ள வருண லிங்க சன்னதியில் நேற்று, மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. அப்போது, வருண லிங்க சன்னதி எதிரில் யாக குண்டம் அமைத்து, சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தினர். மேலும், தண்ணீர் நிரப்பிய அகன்ற பாத்திரத்தில் அமர்ந்தபடி, வருண பகவானை வேண்டி மந்திரங்களை உச்சரித்தனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களும் ஒவ்வொரு விதமான நன்மையை தருபவை என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி, வருண பகவானால் வழிபாடு நடத்தப்பட்ட லிங்கம் எனும் சிறப்பு மிக்க வருண லிங்க சன்னதியை வழிபட்டால் மழை வரும் என்பது நம்பிக்கையாகும்.

Tags : shrine ,Varuna Linga ,Thiruvannamalai Kiribatham , Thiruvannamalai, Varuna Linga shrine, rain
× RELATED அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது