×

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததால் வாழ்த்து மழையில் நனைந்து வரும் ஜொமாட்டோ நிறுவனம்!

ராஜஸ்தான்: மாற்றுத்திறனாளி இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜொமாட்டோ நிறுவனம், தற்போது நெட்டிசன்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பீவார் என்ற பகுதியில் இரண்டு கால்களும் செயல்படாத ராமு சாஹூ என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் ஜொமோட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிகிறார். 40 டிகிரி வெயிலில் மூன்று சக்கர வாகனத்தில் சென்று உணவுகளை டெலிவரி செய்யும் இவரது வீடியோ சில வாரங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது. மாற்றுத்திறனாளியின் குறைகளைப் பார்க்காமல் அவரின் கடின உழைப்பை மட்டும் கண்டு வேலை கொடுத்துள்ள ஜொமோட்டோ நிறுவனத்தை நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளினர்.

மேலும் இது போன்ற கடுமையான உழைப்பாளிக்கு பேட்டரியில் இயங்கும் வாகனத்தைக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த ஜொமாட்டோ நிறுவனம், இதுவரை கைகளால் இயக்கக் கூடிய மூன்று சக்கர வாகனத்தின் மூலம் உணவுகளை டெலிவரி செய்து வந்த ராமு சாஹூவுக்கு, தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றைப் பிரத்யேகமாக தயாரித்து அதை வழங்கியுள்ளது. இந்த தகவலை ஜொமாட்டோ நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோயல், எங்கள் தொழிலாளர் ராமு சாஹூ, எலக்ட்ரிக் வாகனத்தை ஏற்றுகொண்டார். எங்களுக்கு அது மகிழ்ச்சியை தந்துள்ளது, என்று கூறியுள்ளார்.

தற்போது ராமு இந்த வாகனத்தின் மூலம் டெலிவரி செய்து வருகிறார். இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவ ஜொமாட்டோ நிறுவனத்துக்கும், ராமுவுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கும் இந்த உலகில் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், மனிதருக்கு சக மனிதர் மீது கருணை இருப்பதில்லை எனும் ரீதியில் தான் நாம் வாசிக்கும் செய்திகளில் பெரும்பான்மை இருக்கும். இந்த புலம்பல்களை எல்லாம் கடந்து ஒன்றிரண்டு கதைகள், மீண்டும் நமக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கும். அப்படியான ஒரு கதை தான் ராமு சாஹூவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : company ,Jomato ,greetings ,generation , Zomato,gift,electric vehicle,disabled,delivery partner
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...