×

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி எதிரொலி: டி.வி. விவாதங்களில் பங்கேற்க செய்தித்தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் தடை

டெல்லி: டி.வி. சேனல் விவாதங்களில் செய்தித்தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் காங்கிரஸ் கட்சி தடைவிதித்துள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7  கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி  அமைக்கிறது. டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி.க்கள் கூட்டத்தில், இதன் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு  பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில், 2வது முறையாக பிரதமர் பதவியை மோடி ஏற்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இதற்கிடையே, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு 90 இடங்களும், மற்றவைகளுக்கு 102 இடங்களும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சி மட்டும் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காந்தி குடும்பத்தினர்  தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த அமேதி தொகுதியில் ராகுல் காந்தியே தோல்வி அடைந்தார். கடந்த 5 மாதத்திற்கு முன் ஆட்சியை பிடித்த ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை ராகுலால்  ஜீரணிக்க முடியவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரசின் ஜார்கண்ட், அசாம், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஒடிசா மாநில தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 55 தொகுதிகளிலாவது தனித்து வென்றிருக்க வேண்டும். ஆனால் 52 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து பறிபோனது.  இருப்பினும் ஆளுங்கட்சி விரும்பினால் காங்கிரசுக்கு எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கலாம் என கூறப்படுகிறது. கடந்த முறை மக்களவைத் தேர்தலின்போதும், காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டதால் எதிர்க்கட்சி  அந்தஸ்தை இழந்தது. தற்போது 2-வது முறையாக காங்கிரஸ் கட்சி அதே நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த தோல்வியால் கடும் அதிருப்தி அடைந்த ராகுல், கடந்த சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தனது குமுறல்களை கொட்டித் தீர்த்தார். மகன்களுக்கு சீட் கேட்டு சில மூத்த தலைவர்கள் தனக்கு நெருக்கடி  கொடுத்ததாகவும், பிரசாரத்திலும் கட்சியை விட சொந்த நலனே முக்கியமாக கருதி செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதோடு, தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தை  சேராதவராக இருக்க வேண்டும் எனவும் ராகுல் கூறினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், டி.வி. சேனல் விவாதங்களில் செய்தித்தொடர்பாளர்கள் பங்கேற்க ஒரு மாதம் காங்கிரஸ்  கட்சி தடைவிதித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், செய்தித்தொடர்பாளர்களை டி.வி.விவாதங்களுக்கு அனுப்ப வேண்டாம் என காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளது என்றும் டி.வி.விவாதங்களுக்கு பங்கேற்க காங்கிரஸ் நிர்வாகிகளை  அழைக்க வேண்டாம் என்றும் டி.வி. ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Echo ,defeat ,elections ,TV Congress ,spokespersons , Parliamentary election, fiasco, TV Discussions, newsletters, Congress, bans
× RELATED வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை!:...