×

பாஜ.வின் நடவடிக்கையை எதிர்த்து மே.வங்கத்தில் மம்தா இன்று தர்ணா: மேலும் ஒரு எம்எல்ஏ கட்சி தாவியதால் ஆவேசம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அடுத்தடுத்து பாஜ.வில் சேர்ந்து வருகின்றனர். நேற்றும் ஒரு எம்எல்ஏ பாஜவில் இணைந்தார். பாஜ.வின் இந்த காய்  நகர்த்தலுக்கு கண்டனம் தெரிவித்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தில் முதல் முறையாக 18 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. 42  தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வென்றது. அதிக இடங்களை கைப்பற்றினாலும், பாஜ.வை வலுவாக காலூன்ற விட்டது திரிணாமுல்லின் தோல்வியாகவே கருதப்படுகிறது.இதனால், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் அம்மாநில முதல்வர் மம்தா, கடும் அதிருப்தியில் உள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அடுத்தடுத்து பாஜவில் சேர்ந்து வருகின்றனர். தேர்தல் முடிவைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் தாமரை’யை மேற்கு வங்கத்தில் பாஜ கையில் எடுத்துள்ளது. அதன்படி,  திரிணாமுல் கட்சியினரை தொடர்ந்து பாஜ வசம் இழுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் இக்கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.க்கள், 60 கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்த ஒரு எம்எல்ஏ ஆகியோர் பாஜவில் இணைந்தனர். நேற்று  திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ பாஜ.வுக்கு தாவினார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மொனிருல் இஸ்லாம் பாஜ.வில் தன்னை இணைத்துக் கொண்டார். இது குறித்து பாஜ தரப்பு தகவல்கள் கூறுகையில், ‘‘இன்னும் 6 எம்எல்ஏ.க்கள் கட்சி தாவ தயாராக  இருக்கிறார்கள். அதோடு முன்னாள் எம்பி.க்களும் வரிசையில் நிற்கிறார்கள்.’’ என்றார்.

பாஜவின் தேசிய செயலாளர் ராகுல் சின்கா கூறுகையில், ‘‘திரிணாமுல் காங்கிரசின் பதவிக்காலம் 2021ம் ஆண்டு வரை நீடிக்காது. அடுத்த 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ சட்டப்பேரவை தேர்தல் வந்துவிடும்,’’ என்றார். பாஜவின்  இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற பாஜ குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி உள்ளது. மேலும், பாஜவின் நடவடிக்கையை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தர்ணா போராட்டத்தை அறிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த அவர், உடனடியாக தர்ணா  போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதனால், மேற்கு வங்க அரசியல் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.



Tags : Mamata ,MLA ,BJP , Oppose, BJP's , Mamta , Darna
× RELATED மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்