வெளிநாடு செல்வதற்காக கட்டிய 10 கோடியை திருப்பித் தர முடியாது: கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி

புதுடெல்லி:  வெளிநாடு செல்வதற்காக பிணை தொகையாக செலுத்திய ₹10 கோடியை திருப்பி அளிக்கும்படி கேட்ட கார்த்தி சிதம்பரத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் மீதான வெளிநாட்டு நேரடி முதலீடு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் குற்றவாளியாக சேர்க்கப்ட்டுள்ளார். இது தொடர்பாக அமலாக்கத் துறையும்,  சிபிஐ.யும் விசாரணை நடத்தி வருகின்றன. இதனால், இவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்கி, வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.  

இதை விசாரித்த நீதிமன்றம், ₹10 கோடி பிணைய நிதி செலுத்திவிட்டு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ₹10 கோடி செலுத்தினார். இந்நிலையில், இந்த தொகையை திருப்பி வழங்கும்படி கோரி, உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். இதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  மற்றும் நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், கார்த்தி சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

‘தொகுதியின் நலனில் அக்கறை காட்டுங்கள்’
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ₹10 கோடி பிணைத் தொகையை தனக்கு திருப்பி வழங்கும்படி கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல்  செய்துள்ள மனுவை நேற்று விசாரித்து தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,  ‘‘எம்பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள நீங்கள், உங்கள் தொகுதியின் நலனில் அக்கறை செலுத்துங்கள்,’’, எ்ன்று அறிவுரை வழங்கினர்.


× RELATED பிரதமரிடம் திமுக மனு