×

விஜயவாடா விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் இன்று பதவியேற்பு

திருமலை: ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்கிறார். இவ்விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட  தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று மதியம் 12.23 மணிக்கு ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு இரண்டாவது முதல்வராக பதவியேற்க உள்ளார்.பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்துள்ளன. சுமார் 30 ஆயிரம் பேர் அமர்ந்து விழாவை காணும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களை  வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை அவரது வீட்டிற்கு சென்று அழைப்பு விடுத்த ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.இதேபோன்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் போனில் அழைப்பு விடுத்து தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்று தன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்,  திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதேபோல், பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரபல நடிகரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவருமான சிரஞ்சீவிக்கும் அவரது தம்பியும், ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர்  பவன் கல்யாணுக்கும் ஜெகன் மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.திருப்பதியில் தரிசனம்: ஆந்திர முதல்வராக இன்று பதவியேற்க உள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன் ரெட்டி சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்ற எம்பி, எம்எல்ஏக்களும் சுவாமி தரிசனம் செய்தனர். ஜெகன்மோகன் ரெட்டி வருகையையொட்டி ஏழுமலையான் கோயிலில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது  நிறுத்தப்பட்டது. அவர் புறப்பட்டு சென்ற பிறகே சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இதையடுத்து ஜெகன்மோகன்ரெட்டி கடப்பாவில் உள்ள பெரிய தர்கா, அவரது சொந்த தொகுதியான புலிவெந்துலாவில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார். பின்னர் சொந்த ஊரான இடுப்புலபாயவில் உள்ள தனது  தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மலர் அஞ்சலி செலுத்தி விட்டு விஜயவாடா புறப்பட்டு சென்றார்.

காரை நிறுத்திய பெண்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இருந்து கடப்பாவிற்கு செல்வதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் கான்வாய் வாகனம் நேற்று  புறப்பட்டது. அப்போது பெண் ஒருவர் திடீரென வாகனத்தின் குறுக்கே நுழைந்து நிறுத்த முயன்றார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அங்கிருந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்தனர். இதனைப்பார்த்த ஜெகன்மோகன்  ரெட்டி அந்த பெண்ணை அருகில் அழைத்து விசாரித்தார். இதில் அவர் அமலாபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தனது கணவருக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரது விவரங்களை கேட்டு தனக்கு  தெரியப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஜெகன்மோகன் ரெட்டி புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தெ.தே பேரவை தலைவராக சந்திரபாபு ஒருமனதாக தேர்வு
ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவர் சந்திரபாபு நாயுடு இல்லத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்தக்  கூட்டத்தில் சட்டப்பேரவை குழு தலைவராக வெற்றி பெற்ற 23 எம்எல்ஏக்கள் சந்திரபாபு நாயுடுவை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்  தேர்ந்தெடுக்கப்படலாம் என வதந்திகள் பரவிய நிலையில் சந்திரபாபு நாயுடுவே எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags : Jagan Mohan ,Chief Minister ,Vijayawada Festival , Chief Minister , Vijayawada, Jagan Mohan, today
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்